‘நம்பர்–1’ நோக்கி கோஹ்லி: டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில்... | அக்டோபர் 14, 2019

தினமலர்  தினமலர்
‘நம்பர்–1’ நோக்கி கோஹ்லி: டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில்... | அக்டோபர் 14, 2019

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் கோஹ்லி, 936 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறார். இவர், முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை (937) விட ஒரு புள்ளி மட்டுமே குறைவாக பெற்றுள்ளார்.

டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் விராத் கோஹ்லி, 936 புள்ளிகளுடன் 2வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இவர், சமீபத்தில் புனேயில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் 254 ரன்கள் விளாசினார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (937 புள்ளி) தொடர்கிறார். ஸ்மித்தை விட ஒரே ஒரு புள்ளி மட்டுமே குறைவாக இருப்பதால், வரும் 19ல் ராஞ்சியில் துவங்கவுள்ள தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் கோஹ்லி சாதிக்கும் பட்சத்தில் ‘நம்பர்–1’ இடத்தை கைப்பற்றலாம்.

புனே டெஸ்டில் 108 ரன் எடுத்த மற்றொரு இந்திய வீரர் மயங்க் அகர்வால், 657 புள்ளிகளுடன் 25வது இடத்தில் இருந்து 17வது இடத்துக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீரர்களான புஜாரா (817 புள்ளி, 4வது இடம்), அஜின்கியா ரகானே (721 புள்ளி, 9வது இடம்) ‘டாப்–10’ வரிசையில் உள்ளனர்.

அஷ்வின் ‘நம்பர்–7’

புனே டெஸ்டில் சுழலில் அசத்திய இந்தியாவின் அஷ்வின் (792 புள்ளி), 10வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய பவுலர் ஜஸ்பிரித் பும்ரா (818 புள்ளி) 3வது இடத்தில் தொடர்கிறார். முதலிரண்டு இடங்களில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் (908 புள்ளி), தென் ஆப்ரிக்காவின் ரபாடா (835) உள்ளனர்.

‘ஆல்–ரவுண்டர்களுக்கான’ தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (414 புள்ளி) 2வது இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீரர் அஷ்வின் (328 புள்ளி) 5வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். முதலிடத்தில் விண்டீசின் ஜேசன் ஹோல்டர் (472 புள்ளி) உள்ளார்.

மூலக்கதை