எல்லையில் டிரோன்களை அழிக்க நவீன தடுப்பு அமைப்பு

தினகரன்  தினகரன்
எல்லையில் டிரோன்களை அழிக்க நவீன தடுப்பு அமைப்பு

புதுடெல்லி: எல்லைப்பகுதியில் ஆளில்லா விமானங்களை கண்டறிந்து அழிப்பதற்காக எல்லைப் பாதுகாப்பு படைக்கு டிரோன் தடுப்பு அமைப்பு  உருவாக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. சவுதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனங்கள்  மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநில எல்லைக்குள் ஆளில்லா விமானங்கள் நுழைந்தன.  இவை ஆயுதங்களை குவித்து  வருவதாகவும் கூறப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களை தொடர்ந்து ஆளில்லா விமானங்கள் குறித்து நாட்டின் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் உளவுத்துறை அமைப்புக்கள் எச்சரிக்கை அடைந்துள்ளன. ஆளில்லா விமானங்களால் நாட்டின்  பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் அவற்றை எதிர்க்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு அமைப்புகள் ஆலோசித்து வருகின்றன. குறிப்பாக ஆளில்லா விமானங்களை கண்டறிந்து தாக்கி அழிக்கும் தொழில்நுட்பம்  குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. இதன் எதிரொலியாக நாட்டின் பாதுகாப்பு கருதி  எல்லைப் பாதுகாப்பு படையினர், தாக்குதல் நடத்த வரும் ஆளில்லா விமானங்களை கண்டறிந்து, அவற்றை இடைமறித்து தாக்கி அழிப்பதற்கு தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கும்படி  உள்துறை அமைச்சகத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  இதுகுறித்து மூத்த அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆளில்லா விமானங்களை கண்டறியும் முழுமையான அமைப்பு தேவை. ரேடார், ரேடியோ அதிர்வெண் பெறுதல், ஜாமர் கருவிகள்  மற்றும் அனைத்து ஆளில்லா விமானங்களையும் செயலிழக்க செய்வதற்காக கட்டுப்பாடு அமைப்பு கொண்டதாக இவை இருக்க வேண்டும். ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில்  டிரோன் தடுப்பு அமைப்பை பயன்படுத்தவும், இதனை கையாளும் படையினருக்கு தேவையான பயிற்சியை அளிக்கும்படியும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது” என்றனர். டிரோன் தடுப்பு அமைப்பு குறித்து எல்லைப்பாதுகாப்பு படையின் வரைவு விவரக்குறிப்பில், “எதிரிகளின்  தனி அல்லது குழுவாகவோ இயங்கும் டிரோன்களை தூரத்தில் இருக்கும்போதே கண்டுபிடிக்க கூடிய திறன் கொண்டதாகவும், 10  விநாடிகளில் இலக்கை கண்டறியும் திறனும் தடுப்பு அமைப்பு பெற்றதாக இருக்க வேண்டும். இந்த அமைப்பானது குறிப்பிட்ட வரம்பில், பல ஆளில்லா விமானங்களை கண்டறியும் திறன் பெற்றிருப்பதோடு, ரேடியோ மற்றும் ஜிபிஎஸ்  உள்ளிட்டவற்றை ஒரே நேரத்தில் செயலற்றதாக ஆக்குவதன் மூலம் பறக்கும் பொருளை செயலிழக்க செய்து தரையிறங்க செய்யும் கட்டாயத்துக்கு தள்ள வேண்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை