விஞ்ஞானி நம்பிநாராயணனுக்கு ரூ1.30 கோடி நஷ்டஈடு வழங்க சிபாரிசு

தமிழ் முரசு  தமிழ் முரசு
விஞ்ஞானி நம்பிநாராயணனுக்கு ரூ1.30 கோடி நஷ்டஈடு வழங்க சிபாரிசு

திருவனந்தபுரம்: இந்திய விண்வெளி ஆய்வு ரகசியங்களை வெளிநாட்டுக்கு கடத்தியதாக கூறப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ. 1. 30 கோடி நஷ்டஈடு வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
நெல்ைல மாவட்டத்தை சேர்ந்தவர் நம்பிநாராயணன்.

திருவனந்தபுரம் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணிபுரிந்தார். கடந்த 1994ல் இந்திய விண்வெளி ஆய்வு ரகசியங்களை வெளிநாட்டுக்கு கடத்தியதாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை முதலில் கேரள போலீசும், அதன் பிறகு சிபிஐயும் விசாரித்து வந்தது.

இந்த விசாரணையில் இஸ்ரோ ஆய்வு ரகசியங்களை நம்பி நாராயணன் வெளிநாட்டுக்கு கடத்தவில்லை என்பது நிரூபணமானது. இதையடுத்து வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

தொடர்ந்து தனக்கு ரூ. 2 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு உடனடியாக ரூ. 50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த தொகையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள அரசு வழங்கியது. இந்த நிலையில் தனக்கு ரூ. 1 கோடி நஷ்ட ஈடு வேண்டும் என்று கேட்டு திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து நம்பிநாராயணனுக்கு எவ்வளவு நஷ்டஈடு வழங்கலாம் என்பது குறித்து ஆலோசிக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜெயகுமார் தலைமையில் ஒரு கமிஷனை கேரள அரசு நியமித்தது. இந்த கமிஷன் விசாரணை நடத்தியது.

பல்வேறு கோணங்களில் நடந்த விசாரணைக்கு பிறகு கேரள அரசு தற்போது அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ. 1. 30 கோடி நஷ்டஈடு வழங்கலாம் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.


.

மூலக்கதை