டிஜிட்டல் கையொப்பமுடன் பிறப்பு, இறப்பு சான்று: தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
டிஜிட்டல் கையொப்பமுடன் பிறப்பு, இறப்பு சான்று: தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது

வேலூர்: தமிழகத்தில் பதிவு அலுவலரின் டிஜிட்டல் கையொப்பத்துடன் பிறப்பு, இறப்பு சான்றிதழ்க வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. நாட்டில் ஒவ்வொரு குடிமகனின் பிறப்பு மற்றும் இறப்பு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்பது நியதி.

குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தல், திருமணத்துக்கு உரிய வயதை நிரூபித்தல், வாக்குரிமை பெறுதல், ஓட்டுநர் உரிமம் உட்பட பல்வேறு சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரம், மருத்துவம் தொடர்பான தேசிய திட்டங்களை வகுக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை கட்டாயம் பதிவு செய்ய மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

மாநில அரசும் அதற்கான செயல்பாடுகள் வகுக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

அதன்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வசிப்போர் உள்ளாட்சி அமைப்புகளிலும், ஊராட்சிகளில் வசிப்போர் கிராம வருவாய் அலுவலரிடமும் பிறப்பு, இறப்புக்கான சான்றிதழ்களை பெற விண்ணப்பித்து வருகின்றனர். பிறப்பு, இறப்புக்கான சான்றிதழ்கள் பெறுவதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாக புகார் எழுந்தது.

மேலும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட முக்கிய விவரங்கள் தவறாக பதிவு செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். எளிய முறையில் தாமதமின்றி பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் உள்ள பதிவு அலுவலரின் கையொப்பம் டிஜிட்டல் முறையில் அச்சிட்டு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வழங்குவதற்கென தனி மையம் தொடங்கப்பட்டது. மேலும், சான்றிதழ் விவரங்களை சரிபார்த்து உடனுக்குடன் வழங்க பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதன் காரணமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் பணி சீராக நடந்தது. இதன் தொடர்ச்சியாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வினியோகத்தை மேலும் துரிதப்படுத்தும் வகையில் பதிவு அலுவலரின் டிஜிட்டல் கையொப்பமுடன் கூடிய பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிறப்பு, இறப்பு சான்றிதழ் கோரும் விண்ணப்பதாரரின் உண்மை விவரங்கள் ஆய்வு செய்யப்படும்.

பின்னர், பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் அச்சாகியுள்ள விவரங்கள் அனைத்தும் உண்மையா என்று சரி பார்க்கப்பட்டு உடனுக்குடன் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும்’ என்றனர்.

.

மூலக்கதை