நிதியமைச்சகம் தகவல் 81,700 கோடி கடன் 9 நாளில் விநியோகம்

தினகரன்  தினகரன்
நிதியமைச்சகம் தகவல் 81,700 கோடி கடன் 9 நாளில் விநியோகம்

புதுடெல்லி: வங்கிகள் நடத்திய கடன் வழங்கும் திருவிழாவில் 9 நாட்களில் 81,781 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் கூறுகையில், ‘‘வங்கிகள் மூலம் கடன் வழங்கும் விழா கடந்த 1ம் தேதி தொடங்கி 9 நாட்களுக்கு நடத்தப்பட்டது. இதன் மூலம் 81,781 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் புதிய கடன்கள் 34,342 கோடி’’ என்றார்.இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் ‘‘வங்கிகளிடம் போதுமான அளவுக்கு நிதி உள்ளது. பெரிய நிறுவனங்கள் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பணம் வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பெரிய நிறுவனங்கள் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பாக்கியை வழங்குவதற்கு உதவ வங்கிகள் மூலம் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.பெரிய நிறுவனங்களின் கணக்கு தாக்கலில் உள்ள விவரங்களின்படி, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சுமார் 40,000 கோடி பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. வங்கிகள் இணைப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளின் தலைமை நிர்வாக இயக்குநர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், வங்கிகள் இணைப்பு சரியான வகையில் எந்த இடற்பாடும் இன்றி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா வங்கி விவகாரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. நுகர்வோர் நலன் பாதுகாக்கப்படும் என ரிசர்வ் வங்கியும் உறுதி அளித்துள்ளது. இதுபோல் டெபாசிட் உத்தரவாத தொகையை தற்போதுள்ள 1 லட்சத்தில் இருந்து மேலும் உயர்த்த பரிசீலனை செய்யப்படும்’’ என்றார்.

மூலக்கதை