வரலாற்றைத் திரும்(ப் )பிப் பார்க்க வைத்த கீழடி

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
வரலாற்றைத் திரும்(ப் )பிப் பார்க்க வைத்த கீழடி

 

 வரலாற்றைத் திரும்(ப்)பிப்  பார்க்க வைத்த கீழடியின் நான்காம் கட்ட ஆய்வுப் பணிகள் முடிந்து விட்ட நிலையில் , இந்த ஆய்வானது , 'சங்க கால வரலாற்றை மாற்றி எழுதும் அறிக்கை'  என்று ஒரே வரியில் கூறி பெருமை கொள்ளும் அளவிற்குப் பலவிதமான தொல்லியல் பொருட்கள் கீழடி அகழ்வாராய்ச்சி 4 ஆம் கட்டத்தில் கிடைத்துள்ளன எனப் பெருமிதம் பொங்கத் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையர் திரு. உதயச்சந்திரன் அவர்கள் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, 

மிகச் சரியாகக் கூற வேண்டுமானால் கீழடியில் பூமிக்குக் கீழ் 383 சென்டிமீட்டர் ஆழத்தில் கிடைத்த பல பொருட்களில் ஆறு கரிமத்துண்டுகளை கார்பன் டேட்டிங் எனச்சொல்லப்படும் கரிமத்தேதியிட அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில்  மியான்மர் நகரத்திலிருக்கும் ‘பீட்டா’ என்ற ஆய்வகத்திற்கு அனுப்பிவைத்து ஆராய்ச்சி செய்ததில் அது கி.மு 580 ஆம் ஆண்டுக்கு முற்பட்டது என்கிற ஒரு சான்றிதழ் கிடைத்துள்ளது . அதாவது கி.மு 600 ஆம் நூறாண்டுக்கு முன்பே ஒரு மேம்பட்ட நாகரீகம் வளர்ந்து செழித்துள்ளது என்பதற்கு மிகப்பெரிய சான்று அது. அதே மண் அடுக்குகளில் கிடைத்த மண் ஓடுகளில் பிராமிய தமிழ் எழுத்துக்கள் ‘ஆதன், குவிரன் ஆதன்’ எனப் பெயர்கள் தாங்கியவையாக உள்ளன.  பொதுவாக நமது அறிஞர்களின் கருத்தான தமிழ் பிராமிய எழுத்துக்களின் காலம் கிமு 3 நூற்றாண்டு என்பது கி.மு 6 ஆம் நூற்றாண்டு என்று இன்னும் பின்னால் போகிறது. 

மேலும் அங்கு கிடைக்கப்பட்ட சுட்ட மட்பானைகளில் எழுதப்பட்ட பல  எழுத்துக்களில் ஒரே எழுத்து வேறு வேறு வடிவத்தில் எழுதப்பட்டிருந்தது. 

இது  சுடப்பட்ட பானைகளை வாங்கிய பிறகு  மக்கள் அவரவர் பெயர்களைப் பொறித்திருக்கலாம். அதனால் கி.மு 6 ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு நிரம்பப் பெற்ற வளர்ச்சி பெற்ற நாகரீகமாக இருந்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சிந்து சமவெளி எழுத்துக்கள் சித்திர வடிவமானது என்பது நாம் அறிந்ததே. இந்த நான்காம் கட்ட ஆய்வில் கிடைக்கப்பெற்ற 1001 பானை ஓடுகளில் இது போன்ற குறியீடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல அவற்றுள் சில ஓடுகள் அந்த குறியீடுகளை முழுவதும் ஒத்ததாக இருப்பது மிகவும் ஆச்சரியமானது. அத்தகைய ஓடுகள் ஐந்து அல்லது  ஆறு உள்ளன. அவைகளை வைத்து சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் இதற்கும் முற்றிலும் தொடர்பு இருக்கும் என முழுவதுமாக உடனே சொல்ல முடியாது. 

 

இன்னும் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. அதுமட்டுமல்லாது குஜராத், மகாராஷ்டிரா பகுதியில் கிடைக்கக்கூடிய 'கார்னீலியன் அகெட்டு', 'சூது பவளம்' இது போன்ற மணிகள்  இங்குக் கிடைத்துள்ளன. இது அவர்களுடனான தமிழர்களின் வணிகத் தொடர்பை வெளிக்காட்டுகிறது. அது மட்டுமல்லாது உரோமானிய நாட்டின் மட்பாண்டங்கள் பல கிடைத்துள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகன் குளம் என்பது அந்தக் காலத்தில் ஒரு துறை முகமாக இருந்து அதனால் தமிழர்களுக்கும் உரோமானியர்களுக்கும் ஒரு வணிகப் போக்குவரத்து இருந்திருக்கலாம் என்பதையும்  இது குறிக்கிறது. இதனால் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு வெளி நாட்டுத் தொடர்பு நம் மூதாதையர்களுக்கு இருந்திருப்பது ‘உள்ளங்கை நெல்லிக்கனி’. 

இந்த கண்டுபிடிப்பில் மிகவும் ஆச்சர்யப்படத்தக்கது எதுவெனில் சிந்து சமவெளி நாகரீகத்திலும்  பயன்படுத்தப்பட்டு இன்றும் நாம் ஏறு தழுவுதல், ஜல்லிக்கட்டில் பயன்படுத்தும் 'பாஸ் இண்டிகஸ்' என்ற ஒரு வகை  திமில் கொண்ட காளை இங்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்திய தொல்லியல் துறை(ASI)அனுமதி கொடுத்தால் வரும் ஜனவரி மாதம் அடுத்த கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள்   கீழடிக்கு மிக அருகில் இருக்கின்ற கொந்தகை என்ற இடத்தில் உள்ள 'ஒரு முது மக்கள் தாழி' பகுதியிலும் அகரம், மணலூர் போன்ற இடங்களில் தொடங்கப்படவுள்ளன எனச் சிறப்பான செய்தியைச் சிறப்பாக எடுத்துரைத்தார். ஆய்வு தொடங்கட்டும். தமிழனின் ஆழம் அவயம் அறியட்டும்!!

 

மூலக்கதை