தீபாவளிக்கு புத்தாடை, நகை வாங்க தி.நகர், புரசையில் மக்கள் கூட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தீபாவளிக்கு புத்தாடை, நகை வாங்க தி.நகர், புரசையில் மக்கள் கூட்டம்

சென்னை: தீபாவளிக்கு தேவையான புத்தாடை, நகைகள் உள்ளிட்டவற்றை வாங்க சென்னை தி. நகர், புரசைவாக்கத்தில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை வருகிற 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது.

இருந்தாலும் பொதுமக்கள் தீபாவளி ‘பர்சேஸ்’ செய்வதை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே செய்ய தொடங்கினர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தீபாவளி விற்பனை களை கட்டியது.   தீபாவளி பொருட்கள்  வாங்குவதற்காக சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் நேற்று காலையிலேயே சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.

அது மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலமான ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பொருட்களை வாங்க மக்கள் சென்னைக்கு வர தொடங்கினர். இதனால் வர்த்தக பகுதியான சென்னை தி. நகர், புரசைவாக்கம், பழைய வண்ணாரப்பேட்டை, பிராட்வே, பாடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அவர்கள் தங்களுக்கு தேவையான பேன்ட், சர்ட், சுடிதார், ஜீன்ஸ், சேலை, வேட்டி உள்ளிட்ட துணிமணிகளை தேர்ந்ெதடுத்தனர். மாலை 5 மணிக்கு மேல் தி. நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது.

ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் தி. நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் வெள்ளத்தில் குலுங்கின. மேலும் பொருட்களை வாங்க வந்தவர்கள் கார், மோட்டார் சைக்கிளில் வந்தனர்.



இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் பஸ், ரயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

அது மட்டுமல்லாமல் தி. நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் உள்ள கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் கண்ணாடி வளையல், கம்மல், கவரிங் நகைகள், லிப்ஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை தேர்ந்தெடுத்தனர்.   மக்கள் கூட்டத்தால் பாதுகாப்பு மற்றும் வழிப்பறி, திருட்டு சம்பவங்களை தடுக்க தி. நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதுதவிர, சாதாரண உடை அணிந்த போலீசார் மக்களோடு, மக்களாக சென்றவாறு பாதுகாப்பு அளித்தனர். ஒலிபெருக்கி வாயிலாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் தி. நகரில் கண்காணிப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. சில இடங்களில் சாலையின் இருபுறமும் கயிறுகளை கட்டி கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர்.

தீபாவளி நெருங்கி வருவதால் வரும் நாட்களில் கூட்டம் இன்னும் அதிகமாக வர வாய்ப்புள்ளது.

இதனால், பாதுகாப்பை மேலும் பலப்படுத்த போலீசார் முடிவு செய்தனர்.

.

மூலக்கதை