முகவரி இல்லாமல் பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை: சார்பதிவாளர் சங்கம் வலியுறுத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
முகவரி இல்லாமல் பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை: சார்பதிவாளர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: லஞ்சம் பெறுவதாக பதிவு அலுவலர்கள் தொடர்பாக முகவரி இல்லாமல் பெறப்படும் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதா என்று சார்பதிவாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.

இந்த அலுவலகங்கள் மூலம் வீடு, விளை நிலம் தொடர்பான பதிவு, திருமணம் மற்றும் மாவட்ட பதிவாளர் மூலம் சீட்டு, சங்கம் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்ய வருவோரிடம் ஒரு சில சார்பதிவாளர்கள் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பதிவுக்கு வந்த பொதுமக்கள் ஊழல் தடுப்பு பிரிவுக்கு புகார் அளிக்கின்றனர். அந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

இந்த சோதனையின் போது பணம் கைப்பற்றப்பட்டால் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் அந்த சார்பதிவாளர்கள் தொடர்ந்து பதிவுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், அது போன்ற சார்பதிவாளர்கள் செல்லும் சார்பதிவு அலுவலகங்களில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி பணத்தை கைப்பற்றி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்த பதிவுத்துறை ஐஜி அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்பு துறை கடிதம் எழுதுகிறது.

ஆனால், உடனடியாக துறை ரீதியான விசாரணை நடத்தி 6 மாதத்துக்கு இறுதி ஆணை தாக்கல் செய்யப்படுவதில்லை. இதனால், விசாரணை முடியாமல் கடைசி நேரத்தில் ஓய்வு பெற முடியாத நிலை ஏற்படுகிறது.

அதே போன்று பதிவுத்துறை ஐஜி அலுவலகத்துக்கு சார்பதிவாளர்கள் சிலர் மீது பொதுமக்கள் புகார் அளிக்கின்றனர்.

அந்த புகார்மீது பெரும்பாலும் விசாரணை நடத்துவதில்லை. இருப்பினும் அந்த புகாரை வைத்து கொண்டு சில நேரங்களில் உயர் அதிகாரி ஒருவர் சார்பதிவாளர்களை மிரட்டி பணம் பறிப்பதாக கூறப்படுகிறது.

அவ்வாறு பணம் தராத சார்பதிவாளர்கள் மீது சில நேரங்களில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புகார்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் சார்பதிவாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு சார்பதிவாளர் சங்க பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், ‘லஞ்ச ஒழிப்புத்துறையினரால் மேற்கொள்ளப்படும் திடீராய்வு அறிக்கையின் பேரில் குற்றம்சாட்டப்படும் பணியாளர்களின் மீது நடைபெறும் விசாரணை தொடர்பாக விசாரணை அலுவலரை உடனடியாக நியமனம் செய்து 6 மாதத்துக்கு விசாரணை மேற்கொண்டு இறுதி ஆணை பிறப்பிக்க வேண்டும்.

பதிவு அலுவலர் மீது முகவரி இல்லாமல் பெறப்படும் புகார்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கவும், ஆதாரங்களுடன் புகார் மனுக்கள் பெறப்பட்டால் அதன் மீது விசாரணை செய்து 6 மாத காலத்திற்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும். ஓய்வு பெற உள்ள பணியாளர்களின் இன்னல்களை தவிர்க்கும் பொருட்டு ஓய்வு பெற உள்ள பணியாளர்கள் மீது இறுதி நேரத்தில் பெறப்படும் ஆதாரமற்ற புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

அனைத்து தணிக்கை குறிப்புரைகளின் மீது ஏற்படும் இழப்புக்கு பதிவு அலுவலர்களை பொறுப்பாக்க கூடாது. ஆவண சொத்தின் மீது பற்றுகை ஆணை பிறப்பிக்க உரிய வழி வகை செய்ய வேண்டும்’ என முடிவு செய்யப்பட்டுள்ளது.


.

மூலக்கதை