உச்சநீதிமன்றத்தில் இன்று முஸ்லிம் தரப்பு இறுதிகட்ட வாதம்: அயோத்தியில் 144 தடை உத்தரவு: பாதுகாப்பு பணியில் கூடுதல் சிஆர்பிஎப் வீரர்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உச்சநீதிமன்றத்தில் இன்று முஸ்லிம் தரப்பு இறுதிகட்ட வாதம்: அயோத்தியில் 144 தடை உத்தரவு: பாதுகாப்பு பணியில் கூடுதல் சிஆர்பிஎப் வீரர்கள்

புதுடெல்லி: அயோத்தி வழக்கு தொடர்பான விசாரணை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முஸ்லிம் தரப்பு இறுதி வாதம் உச்சநீதிமன்றத்தில் நடக்கிறது. வரும் 17ம் தேதியுடன் இறுதிவாதம் முடிவதால் விரைவில் தீர்ப்பு தேதி அறிவிக்க வாய்ப்புள்ளது.

அதனால், அயோத்தி மாவட்ட நிர்வாகம், அயோத்தி பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்து, கூடுதல் சிஆர்பிஎப் வீரர்களை பணியமர்த்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2. 77 ஏக்கர் நிலம் தொடர்பான விவகாரத்தில், சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, மூலவர் ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோரினர்.

இவர்கள் தொடுத்த வழக்கை விசாரித்த அலாகாபாத் நீதிமன்றம், அந்த இடத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள கடந்த 2010ல் தீர்ப்பளித்தது.

மேற்கண்ட தீர்ப்பை எதிர்த்து 10 மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் எஸ். ஏ. போப்டே, டி. ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ். ஏ. நசீர் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்த நிலையில், சமரசத் தீர்வு காண்பதற்காக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஃப். எம். ஐ. கலிஃபுல்லா தலைமையில் ஒரு மத்தியஸ்த குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.
ஆனால், ‘சமரசப் பேச்சுவார்த்தையில் ஒருமித்த முடிவு எதுவும் எட்டப்படவில்லை’ என்று அந்தக் குழு கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

அதனால், இவ்வழக்கில் கடந்த ஆக. 6ம் தேதி முதல் தினமும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்து, வாதங்களைக் கேட்டு வருகிறது.

இதனிடையே, வழக்கின் வாதங்களை வருகிற 17ம் தேதிக்குள் முடித்துக் கொள்ள இந்து மற்றும் முஸ்லிம் தரப்பினருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, முஸ்லிம் தரப்பினர் தங்கள் வாதத்தை இன்றுடன் (அக்.

14) முடித்துக் கொள்ள வேண்டும்; இந்து அமைப்பினர் தங்கள் கருத்தை அடுத்த 2 நாள்களில் தெரிவிக்க வேண்டும்.

அதனை ெதாடர்ந்து வரும் 17ம் தேதியுடன் இறுதி வாதங்கள் முடிவடைந்துவிடும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், ஒரு வார தசரா விடுமுறைக்குப் பின் உச்சநீதிமன்றம் இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்குகிறது.

முஸ்லிம் தரப்பு இறுதி வாதம் இன்றுடன் முடிகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நவ.

17ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ளதால், அதற்குள்ளாக இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், டிசம்பர் 10ம் தேதி வரை அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி உள்ளிட்ட தொடர் பண்டிகைகள் வருவதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அனுஜ்குமார் ஜா தெரிவித்துள்ளார். இதன்படி அயோத்தியில் அனுமதியின்றி ட்ரோன்கள் பறக்கவிடுவதற்கும், படகுகளில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீபாவளி நேரத்தின்போது பட்டாசுகளை தயார் செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் உரிய முன் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து, அயோத்தியில் ஏற்கனவே போடப்பட்ட பாதுகாப்பு போலீசாருடன், கூடுதலாக சிஆர்பிஎப், உள்ளூர் போலீசாரின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

.

மூலக்கதை