கோடை காலத்தை போன்று சென்னையில் வெயில் கொளுத்துகிறது: புழுக்கத்தால் மக்கள் கடும் அவதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோடை காலத்தை போன்று சென்னையில் வெயில் கொளுத்துகிறது: புழுக்கத்தால் மக்கள் கடும் அவதி

சென்னை: ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்காததால், கோடை காலத்தை போன்று வெயில் கொளுத்தி எடுக்கிறது. சென்னையில் மக்கள் புழுக்கத்தால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வட கிழக்கு பருவமழை அக்டோபர் 20ம்  தேதி தொடங்கி ஜனவரி வரை பெய்வது வழக்கம். கடந்த ஆண்டு அக்டோபர் முதல்  வாரத்தில் பருவமழை தொடங்கிவிட்டது.

இந்த  ஆண்டுக்கான பருவமழை இன்னும்  தொடங்காத நிலையில், சராசரியாக 100 டிகிரி என்ற அளவில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் கோடை காலத்தை போன்று மக்கள் மீண்டும் வெப்பத்தை போக்க இளநீர், குளிர் பானங்களை தேடி அலைய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சென்னை மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த ஆண்டு கோடை காலம் மக்களை வாட்டி வதைத்தது.

கடுமையான குடிநீர் பஞ்சமும் மக்களை கடும் சோதனைக்குள்ளாகியது. இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக அவ்வப்போது பெய்த மழையால் ஓரளவு தண்ணீர் பஞ்சம் முடிவுக்கு வந்த நிலையில், மீண்டும் வெளுத்து வாங்கும் வெயிலால் சென்னை முழுவதும் மீண்டும் வெப்பத் தன்மை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

குளிர் காலத்தை நெருங்கிய நிலையில், வெப்பம் வாட்டி வதைப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஏசி இல்லாமல் வீட்டுக்குள் இருக்க முடிவதில்லை. அந்த அளவுக்கு வெப்பம் கொதிக்கிறது.

கடுமையான புழுக்கத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்படுகின்றனர். காற்றுக்காக கதவை திறந்து வைத்தால் கொசுக் கடிக்கு ஆளாகின்றனர்.

இதனால் எப்போது வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தென்மேற்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் போதிய அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

ஆனால் தற்போது கொளுத்தி எடுக்கும் வெயிலால் அவை, எவ்வளவு நாள் தாக்குபிடிக்கும் என தெரியவில்லை. எனவே, தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை போதிய அளவுக்கு பெய்தால் மட்டுமே சமாளிக்க  முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில்  மழை பெய்து வருகிறது. இந்த வெப்ப சலனம் தொடர்ந்து நீடித்து வருவதால், பெரும்பாலான  மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதவிர, வேலூர்,  திருவண்ணாமலை, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், மதுரை, சேலம்,  திண்டுக்கல், தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில  இடங்களில் கனமழை பெய்யும். இந்த சூழ்நிலையில், தமிழகம் புதுச்சேர், தெற்கு கடலோர  ஆந்திரா, ராயலசீமா, உள் கர்நாடகா, கேரளாவில் வரும் 17ம் தேதி முதல் வட  கிழக்கு பருவமழை தொடங்குவதற்கான  வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு தமிழக மக்களுக்கு ஆறுதலை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை