திருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்

திருச்சி: திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2ம் தேதி அதிகாலை ₹3 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக, திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த மணிகண்டன் மற்றும் கொள்ளை கும்பல் தலைவன் முருகன் அக்கா கனகவல்லி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 4. 8 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன. மேலும், 20க்கும் மேற்பட்ட உறவினர்களை பிடித்து விசாரித்தனர்.

இந்த வழக்கில் கொள்ளை கும்பல் தலைவன் முருகன் மற்றும் சுரேஷை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், தனது தாய் (கனகவல்லி) கைதானதால், முக்கிய குற்றவாளியான சுரேஷ் திருவண்ணாமலை மாவட்ட, செங்கம் கோர்ட்டில் சரணடைந்தார்.

மறுநாள் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையறிந்து, திருச்சி தனிப்படை போலீசார் முருகனை காவலில் எடுத்து விசாரிக்க பெங்களூரு விரைந்தனர்.



அதற்குள், பெங்களூரு பொம்மனஹள்ளி போலீசார் கடந்த 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 6 நாட்கள் முருகனை காவலில் எடுத்தனர். இதுபற்றிய தகவலை ரகசியமாக வைத்திருந்த கர்நாடக போலீசார், தமிழக போலீசாருக்கே தெரியாமல் இரவோடு, இரவாக முருகனை திருச்சிக்கு அழைத்து வந்தனர்.

மேலும், அவரை அழைத்து கொண்டு பூசத்துறை காவிரி ஆற்றுப்படுகையில் புதைத்து வைத்திருந்த ₹4 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ தங்க நகைகளை கைப்பற்றினர்.
இதையறிந்த திருச்சி போலீசார், பெரம்பலூர் அருகே அவரது கார்களை மடக்கி பிடித்தனர். ஆனால், பெங்களூரு போலீசார், மீட்கப்பட்ட நகைகளை பெங்களூரு கோர்ட்டில் ஒப்படைப்பதாகவும், அந்த நகைகளை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து திருச்சி போலீசார் பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் முருகனை அழைத்து கொண்டு நகைகளுடன் பெங்களூரு சென்றனர்.

இதற்கிடையே பெங்களூரு பானஸ்வாடி போலீஸ் நிலைய எல்லையிலும் முருகன் பல இடங்களில் கைவரிசை காட்டி உள்ளார். அந்த வழக்கிலும் அவரிடம் விசாரிக்க வேண்டும் என பானஸ்வாடி இன்ஸ்பெக்டரும் முருகனை கஸ்டடியில் எடுக்க மனு தாக்கல் செய்ய இருக்கிறார்.

முருகன் மீது பெங்களூருவில் 11 காவல் நிலையத்தில் 115 வழக்குகள் உள்ளன. இதனால், மேலும் பல போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் முருகனை கஸ்டடி கேட்டு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இப்படி அடுத்தடுத்து கர்நாடக போலீசார் கஸ்டடி கேட்பதால், திருச்சி போலீசாரிடம் முருகன் ஒப்படைக்கப்படுவது மேலும் காலதாமதமாகும் என தெரிகிறது.

திருச்சியில் கர்நாடக போலீசார் பறிமுதல் செய்த 12 கிலோ நகைகளையும், முருகனையும் கோட்டை விட்ட போலீசார் முருகனை கஸ்டடி எடுப்பதில் திணறி வருகிறார்கள். இதற்கிடையே, திருச்சி சிறையில் உள்ள சுரேசின் காவல் இன்று முடிவதால், அவரை தங்கள் கஸ்டடியில் எடுக்க திருச்சி கோட்டை போலீசார் இன்று கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்கிறார்கள்.

சுரேஷிடம் விசாரணை நடத்தினால் இந்த கொள்ளையில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என போலீசார் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனாலும் திமிங்கலத்தை கோட்டை விட்டு விட்டு மத்தி மீனுக்கு மல்லுகட்டும் நிலையில் திருச்சி போலீசார் உள்ளனர்.

.

மூலக்கதை