சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

தினகரன்  தினகரன்
சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

டெல்லி : சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.சமூக வலைதள கணக்குகளுடன் ஆதார் இணைக்கக் கோரி மனு சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்புவது தற்போது அதிகமாகி விட்டது. இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தன. அதாவது சமூக வலைதள கணக்குடன் அதனை உபயோகப்படுத்தும் பயனர்கள் தங்களது ஆதார் எண்ணை அதனுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் அதிகம் இருப்பதால் அதனை தவிர்க்க அந்த கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் பொதுநல மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஆன்லைன், மற்றும் சைபர் குற்றங்கள் அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதார் இணைக்கப்பட்டால் உடனே குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்பதே மனுதாரரின் கோரிக்கையாக இருந்தது.மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் இந்நிலையில் இந்த மனு இன்று நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருத்த போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும் எல்லா வழக்குகளையும் நாங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் வேண்டுமென்றால் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீங்கள் வழக்கை தாக்கல் செய்யுங்கள் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மூலக்கதை