வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்குச்சந்தை முதலீடு 6,217 கோடி வாபஸ்

தினகரன்  தினகரன்
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்குச்சந்தை முதலீடு 6,217 கோடி வாபஸ்

புதுடெல்லி: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த மாதத்தின் முதல் 2 வாரங்களிலேயே இந்திய பங்குச்சந்தையில் இருந்து 6,217 கோடி முதலீட்டை வாபஸ் பெற்றுள்ளனர். இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்  பங்குகளிலும், கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்து வருகின்றனர். பொருளாதார மந்தநிலை, பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை போன்ற காரணங்களால் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் பெரும்பான்மை முதலீடுகளை வாபஸ் பெற்றனர். குறிப்பாக, மத்திய அரசு வரி சீரமைப்புகளை  அறிவித்த பிறகு, கடந்த மாதத்தில் அதிக முதலீடுகள் வெளியேற்றப்பட்டன. இந்நிலையில், சர்வதேச சந்தையில் ஸ்திரமற்ற பதற்றமான சூழ்நிலை காரணமாகவும், அமெரிக்கா - சீனா வர்த்தகப்போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வருமா அல்லது நீடிக்குமா என்ற குழப்பத்தாலும் இந்த மாதமும் இந்திய  பங்குச்சந்தையில் இருந்து முதலீடுகளை வெளியேற்றியுள்ளனர்.  இதன்படி, கடந்த 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை நிகர முதலீடு ₹6,217.1 கோடியை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விலக்கிக் கொண்டுள்ளனர். இதில் பங்குச்சந்தையில் இருந்து ₹4,955.2 கோடி மற்றும் கடன் பத்திரங்களில் இருந்து விலக்கிய 1,261.9 கோடி அடங்கும்.

மூலக்கதை