உங்கள் பட்ஜெட்டில் எப்போதும் குறைக்க கூடாத செலவுகள்

தினமலர்  தினமலர்
உங்கள் பட்ஜெட்டில் எப்போதும் குறைக்க கூடாத செலவுகள்

செலவுகளை குறைப்பது நல்லது தான். அதிலும் குறிப்பாக, சேமிப்பை அதிகரிக்க வேண்டும் எனில், செலவுகளை கட்டுப்படுத்தியாக வேண்டும். எனினும், குடும்ப பட்ஜெட்டில் ஒரு போதும் குறைக்க கூடாத செலவுகளும் இருக்கின்றன. இந்த செலவுகளை அறிந்திருப்பதுடன், கட்டுப்படுத்தக்கூடிய செலவுகளை தேர்வு செய்வது, வீண் செலவுகளை தவிர்க்க உதவும்.


காப்பீடு முக்கியம்:


ஒவ்வொருவருக்கும் ஆயுள் காப்பீடு முக்கியம். குடும்ப பாதுகாப்பிற்கு போதுமான ஆயுள் காப்பீடு தேவை. எனவே, ஆயுள் காப்பீடு இல்லாமல் இருக்க கூடாது. இதை தவிர்க்க இயலாத செலவாகவே கருத வேண்டும். முதலீடு சார்ந்த காப்பீடு திட்டங்களை தவிர்த்து விட்டு, பாதுகாப்பு மட்டும் அளிக்கும், ‘டெர்ம்’ திட்டங்களை நாடலாம்.

மருத்துவ காப்பீடு:


ஆயுள் காப்பீடு போலவே மருத்துவ காப்பீடும் இன்றியமையாதது. எதிர்பாராத மருத்துவ சிக்கல்கள் ஏற்படும் போது, அதனால் ஏற்படும், மருத்துவமனை செலவுகளை சமாளிக்க மருத்துவ காப்பீடு உதவும். குடும்பத்திற்கு ஏற்ற மருத்துவ காப்பீடு பாலிசியை பெற்றிருக்க வேண்டும். வாகன காப்பீட்டிற்கும் இது பொருந்தும்.

கடன் தவணைகள்:


கடன் சுமையை கவனிக்காமல் விட்டால், கடன் வலையில் சிக்க வைக்கும். எனவே, கடனை அடைக்க முன்னுரிமை அளிக்க வேண்டும். கடனுக்கான தவணைகளை செலுத்துவதை தவிர்க்க கூடாது. குறிப்பாக, கிரெடிட் கார்டு பயன்படுத்தினால், குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்தும் பழக்கம் பாதிப்பை ஏற்படுத்தும்.


அவசரகால நிதி:



எதிர்பாராத நெருக்கடி காலங்களில் குடும்ப செலவுகளை சமாளிக்க அவசர கால நிதி அவசியம். ஆறு மாத கால அடிப்படை தேவைகளுக்கான தொகையாக இது அமைகிறது. அவசர கால நிதியை உருவாக்கவில்லை எனில், முதலில் அதை உருவாக்கி கொள்ள வேண்டும். மற்ற தேவைகளுக்காக இந்த நிதியில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும்.


சேமிப்பு முக்கியம்:



தவிர்க்க இயலாத செலவுகள் என பார்க்கும் போது, அதில் சேமிப்பை மறந்துவிடக்கூடாது. எதிர்கால வளத்தை உருவாக்க சேமிப்பு அவசியம். எனவே, வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கிறது என்ற, எண்ணத்தில், சேமிப்பை குறைத்து விடக்கூடாது. சேமிப்பிற்கு ஒதுக்கிய பின்னரே மற்ற செலவுகளை மேற்கொள்ள வேண்டும்.

மூலக்கதை