வீட்டுக்கடன் பெறுவதற்கு பொருத்தமான நேரமா இது?

தினமலர்  தினமலர்
வீட்டுக்கடன் பெறுவதற்கு பொருத்தமான நேரமா இது?

வட்டி விகிதம் குறையும் போக்கு, ரியல் எஸ்டேட் மந்த நிலை உள்ளிட்ட காரணங்களால், இது, வீட்டுக்கடன் வாங்க ஏற்ற காலமாக கருதப்படுகிறது.


சொந்த வீடு வாங்குவது என்பது மத்திய தர வகுப்பினருக்கு மிகப்பெரிய கனவாக இருக்கிறது. அதே போல, சொந்தமாக வாகனம் வாங்குவதும் அமைகிறது. இந்த இரண்டுக்கும் கடன் வசதி பெறலாம் என்றாலும், கடனுக்கான மாதத்தவணை பொறுப்பை சமாளித்தாக வேண்டும். இது, குடும்ப பட்ஜெட் மீது தாக்கம் செலுத்தும் என்பதால், சரியான திட்டமிடல் அவசியம்.



எனவே, பலரும், வீட்டுக்கடன் அல்லது வாகன கடன் வாங்குவதை தள்ளிப்போட்டலாம். அல்லது சரியான காலத்திற்காக காத்திருக்கலாம்.வீட்டுக்கடன் அல்லது வாகன கடன் வாங்க திட்டமிட்டுகாத்திருப்பவர்கள், அதை செயல்படுத்த தற்போதைய சூழல் பொருத்தமானதாக கருதப்படுகிறது.வட்டி விகித குறைப்பு, ரியல் எஸ்டேட் மற்றும் ஆட்டோமொபைல் துறையில் நிலவும் மந்த நிலை உள்ளிட்ட காரணங்கள் இதற்கு சாதகமாக அமைவதாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.



சலுகைகள்


நாட்டில் ரியல் எஸ்டேட் துறை தொடர்ந்து, மந்த நிலையை எதிர்கொண்டு வருகிறது. பொருளாதாரத்தின் போக்கு, வங்கிசாரா நிதி நிறுவன துறையில் ஏற்பட்டு உள்ள நெருக்கடி ஆகியவை இத்துறை வளர்ச்சியை மேலும் பாதித்துள்ளன.



பல நகரங்களில், வீடுகளின் மொத்த விலை குறைந்து இருக்கிறது. அதாவது, வீடுகளின் விலை உயர்வு, நுகர்வோர் பணவீக்கத்தை விட குறைவாக உள்ளது. கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் தேங்கிஉள்ள நிலையில், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விலையில் சலுகை அளித்து வாடிக்கையாளர்கள் கவர்வதில் ஆர்வம் காட்டுகின்றன. மேலும் பண்டிகை கால விற்பனையிலும் நிறுவனங்கள் கவனம் செலுத்துவதால், வாடிக்கையாளர்கள் விலை உள்ளிட்ட விஷயங்களில் சாதகமான நிலை பெறலாம்.


மேலும் வட்டி விகித போக்கும் சாதகமாக அமைந்துள்ளது. ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக ரெப்போ விகிதத்தை குறைத்திருப்பதால், கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் போக்கு காணப்படுகிறது. வங்கிகள் மெல்ல, கடன் வட்டி விகிதத்தை குறைத்து வருகின்றன. அதே நேரத்தில், வங்கிகள், கடனுக்கான வட்டி விகிதத்தை தீர்மானிக்க ரெப்போ விகிதம் உள்ளிட்ட வெளிப்புற அளவுகோளை பின்பற்றத் துவங்கி உள்ளன. இதன் காரணமாக, ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பின் பலன் வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவில் மாற்றப்படும் வாய்ப்பு உள்ளது.

வாகன சந்தை

ரியல் எஸ்டேட் போலவே, ஆட்டோ மொபைல் சந்தையும் சவாலான சூழலை சந்தித்து வருகிறது. வாகன விற்பனை வளர்ச்சியில் தொடர்ந்து மந்த நிலை காணப்படுகிறது. பொதுவாகவே, பண்டிகை காலத்தில் வாகன நிறுவங்கள் சலுகைகள் மூலம் விற்பனையை அதிகரிக்கும் வழக்கம் கொண்டுள்ளன. இந்த ஆண்டு, தேக்க நிலை காரணமாக ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் கூடுதல் சலுகைகள் அளிக்க தயாராக இருப்பது, வாகன கடன் பெற திட்டமிட்டுள்ளவர்களுக்கு பலன் அளிக்க கூடியதாகும்.



மேலும் முன்னணி வங்கிகளும், கார் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளன.எனவே, வீட்டுக்கடன் அல்லது வாகன கடன் பெறுவதற்கு ஏற்ற நேரமாக தற்போதைய சூழல் அமைவதாக கருதப்படுகிறது. வாடிக்கையாளர்கள் வட்டி விகித பலனை பெறுவதோடு, தள்ளுபடி சலுகைகளையும் சாதகமாக்கி கொள்ளலாம் என்று கருதப்படுகிறது.

மூலக்கதை