இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி | அக்டோபர் 13, 2019

தினமலர்  தினமலர்
இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி | அக்டோபர் 13, 2019

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வென்றது. இரண்டாவது டெஸ்ட் மகாராஷ்டிராவின் புனேயில் நடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 601/5 ரன்களுக்கு ‘டிக்ளேர்’ செய்தது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 275 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஜடேஜா அசத்தல்: நான்காம் நாள் ஆட்டத்தில், 326 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி, ‘பாலோ ஆன்’ தந்தது. இதனால், தென் ஆப்ரிக்க அணி மீண்டும் பேட்டிங் செய்தது. இஷாந்த் ‘வேகத்தில்’ மார்க்ரம் டக் அவுட்டானார். உமேஷ் பந்தில் புருய்ன் (8) ஆட்டமிழந்தார். அஷ்வின் ‘சுழலில்’ டுபிளசி (5), எல்கர் (48) சிக்க, உணவு இடைவேளையின்போது, அணி 4 விக்கெட்டை பறிகொடுத்தது. இதன்பின், ஜடேஜா ‘சுழல்’ வலை விரித்தார். இதில் குயின்டன் (5), பவுமா (38) சரணடைந்தனர். ஷமி தன் பங்கிற்கு முத்துசாமியை (9) வெளியேற்றினார்.

மிரட்டிய உமேஷ்: முதல் இன்னிங்சில் தொல்லை தந்த பிலாண்டர்– மஹராஜ் ஜோடி மீண்டும் இணைந்தது. ஜடேஜா பந்துவீச்சில் பிலாண்டர் தொடர்ந்து இரண்டு சிக்சர் பறக்கவிட்டார். அஷ்வின் பந்துவீச்சில் மஹராஜ் இரண்டு பவுண்டரி அடித்தார். இம்முறை, இவர்களை பிரிக்க உமேஷை அழைத்தார் கோஹ்லி. தனது 67வது ஓவரின் முதல் பந்தில் பிலாண்டரை (37) திருப்பி அனுப்பிய உமேஷ், கடைசி பந்தில் ரபாடாவை (4) வெளியேற்றினார். ஜடேஜா பந்தில் மஹராஜ் (22) சிக்க, இந்திய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக உமேஷ், ஜடேஜா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

ஆட்ட நாயகன் விருதை கோஹ்லி வென்றார்.

மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 19ல் ராஞ்சியில் துவங்குகிறது.

புனேயில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 40 புள்ளிகள் வழங்கப்பட்டது. இதனையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 200 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இதுவரை விளையாடிய 4 டெஸ்டிலும் (எதிர்: விண்டீஸ், தென் ஆப்ரிக்கா, தலா 2 போட்டி) இந்திய அணி வெற்றி பெற்றது. அடுத்த இரண்டு இடங்களில் தலா 60 புள்ளிகளுடன் முறையே நியூசிலாந்து, இலங்கை அணிகள் உள்ளன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தலா 56 புள்ளிகளுடன் முறையே 4, 5வது இடங்களில் உள்ளன.

மஹராஜ் விலகல்

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் ‘பீல்டிங்’ செய்த போது தென் ஆப்ரிக்க சுழற்பந்துவீச்சாளர் கேஷவ் மஹராஜ், வலது தோள்பட்டை பகுதியில் காயமடைந்தார். இதனையடுத்து இவர், வரும் 19ல் ராஞ்சியில் துவங்கவுள்ள 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் ஜார்ஜ் லிண்டே சேர்க்கப்பட்டுள்ளார்.

‘‘தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய போதும், ‘ரிலாக்சாக’ இருக்க மாட்டோம். கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 3–0 என, முழுமையாக வெல்வோம். ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது.’’ என, இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

அசத்திய சகா

அம்பயர் செய்த தவறு

இஷாந்த் பந்தில் தென் ஆப்ரிக்காவின் மார்க்ரமுக்கு எல்.பி.டபிள்யு., முறையில், அம்பயர் நைஜல் லாங் (இங்கிலாந்து) அவுட் தந்தார். ‘அப்பீல்’ செய்வது குறித்து சக பேட்ஸ்மேன் எல்கரிடம், மார்க்ரம் கேட்டார். இவர் ‘ரிவியூ’ வேண்டாம் என கூற, மார்க்ரம் (0) ரன் கணக்கை துவக்காமல் கிளம்பினார். ‘ரீப்ளேயில்’ பந்து ஸ்டம்பை விட்டு விலகி சென்றது தெரியவர, ஆலோசனை தந்த எல்கர் ஏமாற்றம் அடைந்தார்.

ஆறு முறை

நேற்றைய ஆட்டத்தில் அஷ்வின் ‘சுழலில்’ எல்கர் (48) அவுட்டானார். டெஸ்ட் அரங்கில் இவர் அஷ்வினிடம்தான் அதிகபட்சமாக 6 முறை ஆட்டமிழந்துள்ளார்.

* இதைப்போல, தென் ஆப்ரிக்க கேப்டன் டுபிளசியும், டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக 5 முறை அஷ்வினிடம் அவுட்டாகி உள்ளார்.

2008க்குப்பின்...

டெஸ்ட் அரங்கில் 2008ல் இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் போட்டியில், தென் ஆப்ரிக்கா ‘பாலோ ஆன்’ பெற்றது. இதன்பின், 11 ஆண்டுகளுக்குப்பின் தற்போதுதான் மீண்டும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டது.

மூலக்கதை