இந்திய அணி உலக சாதனை | அக்டோபர் 13, 2019

தினமலர்  தினமலர்
இந்திய அணி உலக சாதனை | அக்டோபர் 13, 2019

புனே: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி, சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய உலக சாதனை படைத்தது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றத. புனேயில் நடந்த 2வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2–0 எனக் கைப்பற்றி முன்னிலை பெற்றது.

கடந்த 2013 பிப்ரவரியில் சொந்த மண்ணில் நடந்த, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான (பார்டர்–கவாஸ்கர் டிராபி) டெஸ்ட் தொடரை இந்திய அணி 4–0 என கைப்பற்றியது. இதன்பின், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 11வது முறையாக (பிப். 2013– அக். 2019) சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை வசப்படுத்தியது. இதன் மூலம் சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் தொடரை வென்ற அணி என்ற உலக சாதனை படைத்தது. இதற்கு முன், ஆஸ்திரேலியா இரண்டு முறை (நவ.1994–ஜன. 2001 மற்றும் ஜூலை 2004–டிச. 2008) தலா 10 தொடர்களை வென்றதே அதிகமாக இருந்தது. இந்தகாலகட்டத்தில் நடந்த இரண்டு தொடர்களுக்கு தோனி கேப்டனாக இருந்தார். கோஹ்லி, ரகானே முறையே 7, 1 தொடர்களில் அணியை வழிநடத்தினர். இதில் 2017ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மட்டும் கோஹ்லி 3, ரகானே ஒரு போட்டிக்கு கேப்டனாக இருந்தனர்.

30 வெற்றி

இப்போட்டி, விராத் கோஹ்லி கேப்டனாக களமிறங்கிய 50வது போட்டியாக அமைந்தது. டெஸ்ட் அரங்கில் குறைந்தபட்சம் 50 டெஸ்டில் அதிக வெற்றி தேடித்தந்த கேப்டன்கள் வரிசையில், 3வது இடத்தை பிடித்தார். இதுவரை 30 வெற்றி, 10 தோல்வி, 10 ‘டிரா’ பெற்றுத்தந்துள்ளார். இதில், சொந்த மண்ணில் 17 வெற்றி (மொத்தம் 23 போட்டி), அன்னிய மண்ணில் 13 வெற்றி (27 போட்டி) தேடித்தந்துள்ளார். முதலிரண்டு இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக் (37 வெற்றி), ரிக்கி பாண்டிங் (35) உள்ளனர்.

 

இந்திய அணிக்காக, அதிக முறை இன்னிங்ஸ் வெற்றி தேடித்தந்த கேப்டன்கள் வரிசையில், இரண்டாவது இடத்தை அசாருடன் பகிர்ந்து கொண்டார் கோஹ்லி. இருவரும் தலா 8 முறை இந்த இலக்கை எட்டி உள்ளனர். தோனி (9 முறை) முதலிடத்தில் உள்ளார்.

 

முதல் கேப்டன்

தென் ஆப்ரிக்க அணிக்கு ‘பாலோ ஆன்’ தந்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமை பெற்றார் விராத் கோஹ்லி. ஒட்டுமொத்தமாக, இதுவரை இவரது தலைமையில் 7 முறை ‘பாலோ– ஆன்’ தரப்பட்டுள்ளது. இதில் 5 வெற்றி, 2 ‘டிரா’ கிடைத்துள்ளன.

 

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் அரங்கில் இந்திய அணி சிறந்த வெற்றியை (இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்) பதிவு செய்தது. இதற்கு முன், கோல்கட்டாவின் ஈடன் கார்டனில் 2010ல் நடந்த டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 57 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே சிறந்ததாக இருந்தது.

மூலக்கதை