மத்தாப்'பூ' சந்தோஷம்! பின்னலாடை தொழிலாளர்களுக்கு போனஸ் பட்டுவாடா துவங்கியது

தினமலர்  தினமலர்
மத்தாப்பூ சந்தோஷம்! பின்னலாடை தொழிலாளர்களுக்கு போனஸ் பட்டுவாடா துவங்கியது

திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்களுக்கு, தீபாவளி போனஸ் பட்டுவாடா துவங்கியுள்ளது.பின்னலாடை நகரான திருப்பூரில், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச்சேர்ந்த, ஆறு லட்சம் தொழிலாளர் பணிபுரிகின்றனர். தொழிலாளர்களுக்கு, ஆண்டுதோறும், தீபாவளியையொட்டி, போனஸ் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு கூடுதல் விகிதத்தில் போனஸ் வழங்கவேண்டும் என, தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. நிறுவனங்கள், தங்கள் நிதி நிலைக்கு ஏற்ப, போனஸ் வழங்கவேண்டும் என, தொழில் அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.வரும் 27ல் தீபாவளி கொண்டாடப்படும் நிலை யில், பின்னலாடை நிறுவனங்கள், போனஸ் பட்டுவாடாவை துவக்கியுள்ளன. உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பல, வாரச்சம்பளத்துடன் சேர்த்து, தொழிலாளருக்கு நேற்று முன்தினம் போனஸ் பட்டுவாடா செய்தன.மேலாளர், அக்கவுன்டன்ட் போன்ற பல்வேறு வகை நிர்வாக பணியாளர்கள், உற்பத்தி சார்ந்த தொழிலாளர்கள் என, ஒவ்வொரு நிறுவனத்திலும் இருவகை ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்களுக்கு, சம்பள தொகை அடிப்படையில், போனஸ் பட்டுவாடா செய்யப்படுகிறது.பெரும்பாலான நிறுவனங்கள், தொழிலாளர் வங்கி கணக்கில் போனஸ் தொகையை சேர்க்கின்றன. குறு, சிறு நிறுவனங்கள் சில, பழைய வழக்கப்படி, தொழிலாளர் கைகளில் நேர டியாக போனஸ் தொகையை வழங்குகின்றன.
ஆடை உற்பத்தி துறையினர் கூறுகையில், 'போனஸ் வாங்கியபின் பெரும்பாலான தொழிலாளர்கள், பணிக்கு வருவதில்லை; விடுமுறையில் சென்றுவிடுகின்றனர். இதனால், ஆடை தயாரிப்பு பாதிக்கப்படும். கையிருப்பு ஆர்டர்களைப் பொறுத்து, நிறுவனங்கள், வெவ்வேறு நாட்களில் போனஸ் பட்டுவாடா செய்கின்றன.ஏற்றுமதி நிறுவனங்கள், 19ல் துவங்கி 24ம் தேதிக்குள், போனஸ் பட்டுவாடா செய்ய உள்ளன. தொழிலாளர்களுக்கு, அரசு நிர்ணயித்ததைவிட, கூடுதல் விகிதத்தில் போனஸ் வழங்கப்படுகிறது' என்றனர்.

மூலக்கதை