பிசிசிஐ தலைவராக தேர்வாகிறார் சவுரவ் கங்குலி?

தினமலர்  தினமலர்
பிசிசிஐ தலைவராக தேர்வாகிறார் சவுரவ் கங்குலி?

கோல்கட்டா: பிசிசிஐயின் அடுத்த தலைவர் பதவிக்கு முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி பெயர் முன்னிறுத்தப்பட்டுள்ளது.


பிசிசிஐயின் தலைவர் பதவி மற்றும் பிற பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் பெயர் பிசிசிஐ தலைவர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ளது.இவர் தற்போது மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக இருந்து வருகிறார். பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டி இருக்கும் பட்சத்தில் தேர்தல் நடத்தப்படும் எனவும், இல்லையெனில் ஒரு மனதாக கங்குலி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். அவர் தலைவராக வரும் பட்சத்தில் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே என நிர்வாகிகள் பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.


மேலும் பிசிசிஐ செயலாளர் பதவிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். புதிய பொருளாளர் பதவிக்கு பிசிசிஐயின் முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூரின் இளைய சகோதரர் துமால் போட்டியிட மனுதாக்கல் செய்ய உள்ளார்.

தலைவர் மற்றும் பிற பதவிகளுக்குபுதியவர்கள் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் தற்போதைய 33 மாத நிர்வாகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் 23-ம் தேதி மும்பையில் நடைபெற உள்ள பிசிசிஐ ஆண்டு கூட்டத்தில் தமிழ்நாடு, ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட கிரிக்கெட் சங்கம் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனை எதிர்த்து இவர்கள் நீதிமன்றத்திற்கு செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை