எவரெஸ்ட் சிகரம் உயரம் அளவீடு:நேபாளம் சீனா ஒப்பந்தம்

தினமலர்  தினமலர்
எவரெஸ்ட் சிகரம் உயரம் அளவீடு:நேபாளம் சீனா ஒப்பந்தம்

காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளவீடு செய்ய நேபாளம் சீனா இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.


இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கடந்த 11-ம் தேதி இந்தியா வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் உலகப் புகழ் பெற்ற நகரமான மாமல்லபுரத்திற்கு வருகை தந்தார். சீன அதிபரும் பிரதமர் மோடியும் இருதரப்பு உறவு, சர்வதேச பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சீன அதிபர் 12-ம் தேதி நேபாள நாட்டிற்கு சென்றார்.

அந்நாட்டின் பிரதமர் கேபிஷர்மா ஒலி மற்றும் சீன அதிபர் ஜிஜின்பிங்கும் பருவகால மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூட்டாக ஒத்துழைப்பது என ஒப்பந்தம் மேற்கொண்டனர்.

இதன் ஒரு கட்டமாக இமயமலையில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரத்தின் தற்போதைய உயரத்தை அளவீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.


கடந்த 1954 ம் ஆண்டில் இந்தியா எடுத்த எவரெஸ்ட் சிகரத்தின் உயரமான 8,848 மீட்டர் என்பது தற்போது வரை ஏற்று கொள்ளப்பட்டு வந்துள்ளது. இதனிடையே கடந்த 2015 ல் நேபாள நாட்டில் நிகழ்ந்த பயங்கர பூகம்பத்திற்கு பின்னர் சிகரத்தின் உயரம் குறித்து தி இமயமலை டைம்ஸ் என்ற பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டது. தொடர்ந்து 2017 ம் ஆண்டில் நேபாள அரசு அந்நாட்டின் சர்வே துறை சார்பில் எவரெஸ்ட் சிகரத்தை அளவீடு செய்ய குழு ஒன்றை அமைத்தது.இக்குழு அடுத்த ஆண்டு இறுதிக்குள் புதிய அளவீடு குறித்த தகவல்களை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறித்து இதுநாள் வரையில் இந்தியாவின் கணக்கீடை ஏற்று வந்த நிலையில் தற்போது சீனாவும் நேபாளமும் இணைந்து அதன் உயரத்தை மீண்டும் அளவிடும் என அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை