பார்சல்களுக்கு பிளாஸ்டிக் கூடாது; வர்த்தக நிறுவனங்களுக்கு உத்தரவு

தினமலர்  தினமலர்
பார்சல்களுக்கு பிளாஸ்டிக் கூடாது; வர்த்தக நிறுவனங்களுக்கு உத்தரவு

புதுடில்லி: பார்சல்களை அனுப்புவதற்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் உபயோகத்தை, படிப்படியாக நிறுத்தும்படி, வர்த்தக நிறுவனங்களுக்கு, மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடைமுறை, படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் உபயோகத்தை படிப்படியாக நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், தங்கள் பொருட்களை பிளாஸ்டிக் பார்சலில் அனுப்புகின்றன. அந்த நடைமுறையையும் நிறுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, வேறு பொருட்களை பயன்படுத்தும்படியும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


இது குறித்து, அமேசான் ஆன்லைன் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை, ஏற்கனவே நாங்கள் குறைந்து விட்டோம். தற்போது, 7 சதவீதத்துக்கும் குறைவான பொருட்களுக்கு தான், அதை பயன்படுத்துகிறோம். விரைவில், பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக கைவிட்டு விடுவோம்' என்றார்.

மூலக்கதை