அயோத்தி வழக்கு இறுதி விசாரணை இன்று துவக்கம்

தினமலர்  தினமலர்
அயோத்தி வழக்கு இறுதி விசாரணை இன்று துவக்கம்

புதுடில்லி: பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள, அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் இன்று (அக்.,14) துவங்குகிறது.


உ.பி., மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் தீர்ப்பு அளித்தது. 'சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தை, சன்னி வக்ப் வாரியம், நிர்மோஹி அகாடா மற்றும் ராம் லல்லா பிரித்துக் கொள்ள வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தசரா விடுமுறை


இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், 14 மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலம் தொடர்பாக சமரசம் செய்வதற்காக, மூன்று பேர் குழுவை, உச்ச நீதிமன்றம் அமைத்தது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பிரபல வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு அடங்கிய இந்தக் குழு, அனைத்து தரப்பினருடனும் ஆலோசனைகள் நடத்தியது.

ஆனால், சமரசம் ஏற்படவில்லை. அதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்நு நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, ஆக., 6 முதல் தினமும் விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நவ., 17ல் ஓய்வு பெறுகிறார். அதனால், அன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.


தீர்ப்பு எழுதுவதற்கு, நான்கு வாரங்கள் அவகாசம் அளிக்கும் வகையில், அக்., 17க்குள் விசாரணையை முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வார தசரா விடுமுறை முடிந்து, இந்த வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை இன்று துவங்குகிறது. இன்று முஸ்லிம்கள் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட உள்ளன.

பெரும் எதிர்பார்ப்பு


அதற்கடுத்த இரண்டு நாட்கள், ஹிந்து அமைப்பு கள் சார்பில் வாதிடப்படும். வரும், 17ல், இரு தரப்பும் தங்களுடைய இறுதி வாதங்களை முன் வைக்க உள்ளன.அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமான பிரச்னை யாக உள்ளதால், இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை மற்றும் தீர்ப்பு, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை