திசை திருப்புகிறார் மோடி; ராகுல் குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
திசை திருப்புகிறார் மோடி; ராகுல் குற்றச்சாட்டு

லதுார் : ''வேலை இல்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்னை உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காணாமல், நிலவுக்கு விண்கலம் அனுப்பி சாதனை படைத்துள்ளோம் எனக் கூறி, முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் அரசியலை, பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் மேற்கொண்டு வருகின்றனர்,'' என, காங்., முன்னாள் தலைவர், ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.

மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலையொட்டி, லதுார் மாவட்டத்தில் உள்ள, அவுசா சட்டசபை தொகுதியில், நேற்று நடந்த பிரசாரக் கூட்டத்தில், ராகுல் பேசியதாவது:நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. 2,000 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 'ஆட்டோ மொபைல்' துறை சரிவை சந்தித்து வருகிறது. விவசாயிகள் கடனில் சிக்கி தவிக்கின்றனர். இவ்வளவு பிரச்னைகள் இருக்கையில், நிலவுக்கு, 'சந்திரயான் - 2' விண்கலத்தை அனுப்பியதை, பெரிய சாதனையாக, பா.ஜ., அரசு பேசி வருகிறது.

சந்திரயான் - 2, சீனா, பாகிஸ்தான், ஜப்பான், கொரியா என, பல்வேறு விஷயங்களையும் கூறி, முக்கிய பிரச்னைகளில் இருந்து, மக்களை திசை திருப்பும் முயற்சியை, பிரதமர் மோடியும், அமித் ஷாவும் மேற்கொண்டு வருகின்றனர். நிலவுக்கு விண்கலத்தை அனுப்புவதால், ஏழை மக்கள் மற்றும் இளைஞர்களின் பசியை போக்கி விட முடியாது. மோடியின் திசை திருப்பும் அரசியலுக்கு, ஊடகங்களும் துணை போகின்றன. இவ்வாறு, ராகுல் பேசினார்.

மூலக்கதை