மீண்டும் இமயமலை ரஜினி முடிவில் மாற்றம்?

தினமலர்  தினமலர்
மீண்டும் இமயமலை ரஜினி முடிவில் மாற்றம்?

சென்னை : புதுக்கட்சி துவக்கும் முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், நடிகர் ரஜினி, நேற்று திடீரென, ஐந்து நாள் பயணமாக, மீண்டும் இமயமலை புறப்பட்டு சென்றார்.

கடந்த, 2018ல், 'காலா' படப்பிடிப்பு முடிந்ததும், இமயமலைக்கு ரஜினி சென்றார். பின், சென்னை திரும்பியதும், 'பேட்ட' படத்தில் நடித்தார். தொடர்ந்து, 'தர்பார்' படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது.அடுத்து, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதன் படிப்பிடிப்பு துவங்கும் முன், இமயமலைக்கு செல்ல, ரஜினி விரும்பினார். இதையடுத்து, சென்னையிலிருந்து நேற்று மும்பை புறப்பட்டு சென்றார்.அங்கிருந்து, உத்தரகாண்ட் மாநிலம், டேராடூன் செல்கிறார்.

தொடர்ந்து, ஆன்மீக வழிபாட்டு தலங்கள் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், பாபா குகை போன்ற இடங்களில், ஐந்து நாட்கள் ரஜினி தங்குகிறார்.குறிப்பாக, துவாராஹாட் குருசரண் ஆசிரமத்தில், மூன்று நாட்கள் தங்குகிறார். தனது இந்த ஆன்மீக பயணத்தை, நவம்பர் இறுதியில் தான் மேற்கொள்ள, ரஜினி திட்டமிட்டிருந்தார்.அடுத்த ஆண்டு ஏப்ரலில், கட்சி துவக்கி தீவிர அரசியலில் இறங்கவும் முடிவு செய்திருந்தார்.

ஆனால், அவரது முடிவில், தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. வரும், 2021ல், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆறு மாதத்திற்கு முன் கட்சி துவக்கி, தேர்தலை சந்திக்கலாம் என, அவருடைய அரசியல் ஆலோசகர்கள் கூறியுள்ளனர்.எனவே தான், அவர் தற்போது இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை