ஜப்பானை புரட்டிப்போட்ட சூறாவளி; 33 பேர் பரிதாப பலி: முழு வீச்சில் மீட்பு பணி

தினமலர்  தினமலர்
ஜப்பானை புரட்டிப்போட்ட சூறாவளி; 33 பேர் பரிதாப பலி: முழு வீச்சில் மீட்பு பணி

டோக்கியோ: ஜப்பானை புரட்டிப் போட்ட, 'ஹகிபிஸ்' சூறாவளியில் சிக்கி, 33 பேர் பலியாகினர். இன்னும் பலரை காணவில்லை. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்காசிய நாடான, ஜப்பானில், சுனாமி, புயல், சூறாவளி, நில நடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்கள் அடிக்கடி நிகழ்வது வழக்கம். இதில் சிக்கி, பலர் உயிரிழந்துள்ளனர்.இங்கு, நேற்று முன்தினம் இரவு, ஹின்சு தீவுப் பகுதியை, ஹகிபிஸ் எனப்படும், மிகக் கடுமையான சூறாவளி காற்று தாக்கியது. மணிக்கு, 216 கி.மீ., வேகத்தில் வீசிய சூறாவளியால், ஹின்சு பகுதி, சின்னாபின்னமானது.

வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்களின் கூரைகள் காற்றில் பறந்தன. இளம் சிவப்பு நிறம்துாசுப் படலத்தாலும், பலத்த மழையாலும், வானம் முழுவதும், இளம் சிவப்பு நிறமாக மாறி காட்சியளித்தது. இந்த சூறாவளி, ஜப்பானின் கிழக்கு கடற்கரையை நோக்கி, வேகமாக நகர்ந்து வருகிறது. சூறாவளி செல்லும் வழித்தடத்தில் உள்ள நகரங்கள், கிராமங்கள் கடுமையாக சேதமடைந்தன.

சூறாவளியின் ருத்ர தாண்டவம், ஜப்பானின் பெரும்பாலான பகுதியை உருக்குலைத்து விட்டது. ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள நங்கனோவில், சிக்குமா ஆற்றில், வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. நகருக்குள் வெள்ளம் புகுந்ததால், மக்கள், வீடுகளின் கூரை மீது ஏறி, உயிர் தப்பினர். சூறாவளி காரணமாக, உலக கோப்பை ரக்பி போட்டியின் சில போட்டிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

தலைநகர் டோக்கியோவின் வட கிழக்கு பகுதியில் உள்ள, ஹவோகே என்ற இடத்தையும், வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த பகுதியில், முதியோர் காப்பகத்தில் இருந்த நுாற்றுக்கணக்கானோர், பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். சூறாவளி மற்றும் வெள்ளப் பாதிப்புக்கு, இதுவரை, 33 பேர் பலியாகி விட்டதாகவும், இன்னும் பலரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜ

ப்பானின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மீட்பு குழுவினருடன், 30 ஆயிரம் ராணுவ வீரர்களும் மீட்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் கவலைமுதியவர்கள் பலர், 'எங்கள் வாழ்நாளில் இதுவரை, இப்படிப்பட்ட கடுமையான சூறவாளியையும், வெள்ள பாதிப்பையும் பார்த்தது இல்லை' என, தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் ஏற்பட்டு உள்ள இந்த இயற்கை சீற்றம் குறித்து கவலை தெரிவித்துள்ள, நம் பிரதமர் மோடி, இறந்தவர்களுக்காக இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளில், இந்திய கடற்படையினரும் ஈடுபடுவர் என்றும் தெரிவித்துஉள்ளார்.

மூலக்கதை