நேபாளத்துக்கு சீனா ரூ.3,500 கோடி நிதி

தினமலர்  தினமலர்
நேபாளத்துக்கு சீனா ரூ.3,500 கோடி நிதி

காத்மாண்டு : தெற்காசிய நாடான நேபாளத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள, 3,500 கோடி ரூபாய் கடனுதவி அளிப்பதாக, சீன அதிபர் ஸீ ஜின்பிங் அறிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன், மாமல்லபுரத்தில் இரண்டு நாள் முறைசாரா உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஸீ ஜின்பிங் பங்கேற்றார். இந்திய பயணத்தை முடித்த அவர், நேரடியாக மற்றொரு அண்டை நாடான நேபாளத்துக்கு சென்றார். தலைநகர் காத்மாண்டுவில், அதிபர் பித்யா தேவி பண்டாரியை நேற்று முன்தினம் அவர் சந்தித்து, இரு தரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.

கடந்த, 2015ல் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்தில், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்காக, 3,500 கோடி ரூபாய் கடனுதவி அளிப்பதாக ஜின்பிங் அறிவித்தார். அனைத்து பக்கத்திலும் நிலங்களால் சூழப்பட்டுள்ள நேபாளத்தை, மற்ற நாடுகளுடன் இணைக்கும் பகுதியாக மாற்ற உதவுவதாகவும் ஜின்பிங் அறிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, காத்மாண்டுவையும், எல்லைப் பகுதியான, டடோபானியையும் இணைக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலை பணிகளை மேற்கொள்ள உதவும்படி, நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி கேட்டுக் கொண்டார்.'இமயமலை நாடுகளை இணைக்கும் வகையில் ரயில் திட்டம் துவங்குவது குறித்து ஆராயப்படும்' என, இந்த சந்திப்பின்போது, ஜின்பிங் கூறியுள்ளார்.

முக்கிய எதிர்க்கட்சியான நேபாளி காங்.,கின் தலைவர் ஷேர் பகதுார் துாபா, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் தலைவர், புஷ்ப கமல் தாஹல் பிரசந்தா ஆகியோரையும் ஜின்பிங் சந்தித்தார்.

மூலக்கதை