மாமல்லபுரத்தில் மோடி - ஜின்பிங் சந்திப்பை தொடர்ந்து இந்தியா-சீனாவில் அடுத்தாண்டு 70 நிகழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாமல்லபுரத்தில் மோடி  ஜின்பிங் சந்திப்பை தொடர்ந்து இந்தியாசீனாவில் அடுத்தாண்டு 70 நிகழ்ச்சி

பீஜிங்: மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பின் தொடர்ச்சியாக, ராஜாங்க உறவின் 70ம் ஆண்டை கொண்டாடும் வகையில் இந்தியா மற்றும் சீனாவில் அடுத்தாண்டு 70 நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. இதேபோல், நடந்து முடிந்த முறைசாரா மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக சீனா ஊடகமான ‘சைனா ஜின்ஹுவா நியூஸ்’ கட்டுரை வெளியிட்டுள்ளது.

இந்திய - சீனா இடையே முறைசாரா இரண்டு நாள் உச்சி மாநாடு சென்னை அருகே மாமல்லபுரதில் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

முன்னதாக, கலை நிகழ்ச்சிகள், மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால நினைவுச் சின்னங்கள் பார்வையிடல், கடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சி, இரு தலைவர்களின் தனிப்பட்ட ஆலோசனை, இருதரப்பு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை என்று, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நேற்று மதியத்துடன் நிகழ்ச்சிகள் முடிவடைந்த நிலையில், பிரதமர் மோடி, ‘இந்த முறைசாரா உச்சி மாநாடு சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசு, அனைத்து அரசியல் கட்சிகள், சமூக கலாசார அமைப்புகளுக்கும், சீன பிரதமர் ஜி ஜின்பிங்கிற்கும் நன்றி’ என்று தமிழில் ட்விட் செய்தார்.

அதேபோல், சீன அதிபர் ஜி ஜின்பிங், ‘எனக்கும் மோடிக்கும் இருதரப்பு உறவுகள் குறித்த விவாதம் இதயத்திற்கு நெருக்கமாக இருந்தது. உச்சி மாநாடுகள் இந்தியா-சீனா உறவுகளில் ஸ்திரமான முன்னேற்றத்தை உருவாக்குகின்றன.

இவ்வகையான உச்சிமாநாடுகளை நடத்த முன் முயற்சி செய்த மோடிக்கு பாராட்டுகள்’’ என்று தெரிவித்தார். இந்நிலையில், சீன அதிபர் இந்திய வருகை, முறைசாரா உச்சி மாநாடு குறித்து, சீனாவின் ‘சைனா ஜின்ஹுவா நியூஸ்’ என்ற செய்தி நிறுவனம் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது: தென்னிந்திய நகரமான  சென்னையில் நடந்த இரண்டாவது முறைசாரா கூட்டத்தின் போது, ​ஜின்பிங் மற்றும் மோடி  சந்திப்பின் போது உலகளாவிய மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த, நீண்ட கால மற்றும் தகவல் தொடர்பு பிரச்னைகள் குறித்து ஆழ்ந்த கருத்துக்களை தலைவர்கள் பரிமாறிக் கொண்டனர். கடந்தாண்டு சீனாவின் மத்திய நகரமான வுஹானில் நடந்த  முதல் முறைசாரா சந்திப்பின் போது இரு தலைவர்களும் வெளியிட்ட ஒருமித்த கருத்தை,  மீண்டும் (மாமல்லபுரம் சந்திப்பு) உறுதிப்படுத்தினர்.

சீனாவும், இந்தியாவும் ஒருவருக்கொருவர்  வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. இருதரப்பு உறவுகளின் வளர்ச்சியைப் பற்றி அதிகம் பேசினர்.   தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், அபிவிருத்தி உத்திகளை பகிர்ந்து கொண்டு வலுப்படுத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

உலக அரங்கில் இரு நாடுகளின் பெருகிவரும் முக்கிய பிரச்னைகளை தீர்ப்பது தொடர்பாக ஆழமான கருத்துகளை மோடி எடுத்துக் கூறினார்.

அமைதியான, பாதுகாப்பான  மற்றும் வளமான உலகத்தை கட்டியெழுப்ப இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

மேலும், அனைத்து  நாடுகளும், சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் வளர்ச்சியை எட்டுதல் குறித்தும் பேசினர். பலதரப்பு வர்த்தக முறையை இருதலைவர்களும் ஆதரித்தனர்.

அனைத்து நாடுகளுக்கும் நன்மைகளைத்  தரும் திறந்த மற்றும் உள்ளடக்கிய வர்த்தக ஏற்பாடுகளை செயல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது. அனைத்து நாடுகளிலும் தீவிரவாதத்தை  எதிர்த்துப் போராடுவதற்கு இரு நாடுகளும் உறுதிபூண்டன.

தீவிரவாத  எதிர்ப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு  விடுக்கப்பட்டது. நீண்ட  மரபுகளைக் கொண்ட முக்கியமான சமகால நாகரிக நாடுகளான சீனாவும், இந்தியாவும் மேலும் தங்களது உறவை வலுப்படுத்த வேண்டும்.

பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்த வேண்டும். பல்வேறு கலாசாரங்கள் மற்றும் நாகரிகங்களிடையே பரிமாற்றங்களையும்  புரிந்துணர்வையும் கூட்டாக ஊக்குவிக்க வேண்டும் என்று இரு தலைவர்களும்  ஒப்புக்கொண்டனர்.2020ம் ஆண்டை,  சீனா - இந்தியா கலாசார மற்றும் மக்கள் பரிமாற்றங்களின் ஆண்டாக தேர்வு செய்ய இரு  தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். சீனா - இந்திய வெளியுறவு துறை சார்பில், இரு நாடுகளுக்கு இடையிலான ராஜாங்க ரீதியான உறவின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அடுத்தாண்டு 70 நிகழ்வுகளை  நடத்த இரு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.

இருதரப்பு  வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த, சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு உயர் மட்ட  பொருளாதார மற்றும் வர்த்தக குழுவை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் அமைதியை இரு தரப்பினரும் தொடர்ந்து பராமரிப்பார்கள் என்றும், தகுந்த ஆலோசனையின்  மூலம் கூடுதல் நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட இருதலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

அதே நேரத்தில் இரு  நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகளையும் ஒரு நியாயமான, பரஸ்பர  ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைக் கண்டுபிடிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

முறைசாரா கூட்டங்கள் இரு ஆண்டாக வெற்றிப் பெற்றதால், இதுபோன்ற சந்திப்புகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள இருதலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர்.

சீன அதிபர் ஜின்பிங் பேசும்போது, ‘‘சீனாவும் இந்தியாவும் 1 பில்லியனுக்கும்(100 கோடி) அதிகமான மக்கள்தொகை  கொண்ட நாடுகள். இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல உறவைப் பேணுதல் மற்றும் வளர்ப்பது சீனாவின்  அசைக்க முடியாத கொள்கை.

இன்றைய சர்வதேச சூழ்நிலைகளில், இரு நாடுகளும் உலகளாவிய ஸ்திரத்தன்மையைப்  பாதுகாப்பதிலும், வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் அடுத்த கட்டத்தை அடைய வேண்டும்’’ என்று பேசினார். இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.


.

மூலக்கதை