உலக குத்துசண்டை போட்டியில் தோல்வி: சரி, தவறு உலகத்திற்கு தெரியட்டும்... அப்பீலை ஏற்காததால் மேரி கோம் கோபம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலக குத்துசண்டை போட்டியில் தோல்வி: சரி, தவறு உலகத்திற்கு தெரியட்டும்... அப்பீலை ஏற்காததால் மேரி கோம் கோபம்

மாஸ்கோ: ரஷ்யாவில் நடக்கும் உலக குத்துச்சண்டை பெண்களுக்கான போட்டியில், 51 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் (36), துருக்கியின் புஸ் நாஸ் காகிரோக்லுவுடன் மோதினார். புதிய எடைப் பிரிவில் முதல் முறையாக தங்கப் பதக்கத்தை நோக்கிப் பயணித்த மேரி கோமுக்கு ஏமாற்றமே கிடைத்தது; அவர் 1-4 என்ற ரவுண்ட் கணக்கில் தோற்றார்.

துருக்கி வீராங்கனைக்கு எதிரான இந்த அரை இறுதிப் போட்டியின் முதல் ரவுண்டில் அட்டாக், டிபென்ஸ் ஆகிய இரண்டிலும் சமாளித்து வென்றார். ஆனால் 2-ம், 3-ம் ரவுண்ட்களில் துருக்கி வீராங்கனையில் ஆதிக்கம் மேலோங்கியது.

இந்த ஆட்டத்தில் இந்தியக் குழுவினரின் ஆட்சேபனை (அப்பீல்) குத்துச்சண்டைப் போட்டியின் தொழில்நுட்பக் குழுவால் ஏற்கப்படவில்லை. இது மேரி கோமுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.



அதனால், போட்டிக்கு பின்னர் அவர் வெளியிட்ட ட்வீட்டில், ‘எப்படி, ஏன்? இந்த முடிவில் எவ்வளவு சரி, தவறு என்பது உலகத்திற்கு தெரியட்டும்’ என குறிப்பிட்டு பிரதமர் மோடி, இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரிண் ரிஜ்ஜு ஆகியோரை ‘டேக்’ செய்து பதிவிட்டுள்ளார். மேரி கோம், இதுவரை உலகப் போட்டிகளில் 6 பட்டங்கள், ஒரு ஒலிம்பிக் வெண்கலம்  (2012), ஆசியப் போட்டியில் 5 பட்டங்கள், காமன்வெல்த் மற்றும் பல சர்வதேசப்  போட்டிகளில் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில், 48 கிலோ எடை பிரிவில் மஞ்சுராணி, 4-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னாள் பதக்க வீராங்கனை சுதாமத் ரக்ஸத்தை வீழ்த்தி இறுதிச்சுற்றில் நுழைந்தார்.

18 ஆண்டுகள் கழித்து அறிமுக உலக சாம்பியன் போட்டியிலேயே இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற வீராங்கனை என்ற சிறப்பை மஞ்சு பெற்றுள்ளார்.

.

மூலக்கதை