திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்: ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்: ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த வாரம் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.

இதையடுத்து ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதாலும் வார விடுமுறை என்பதாலும் நேற்றும் இன்றும் பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்தது.

நேற்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை 1 லட்சத்து ஆயிரத்து 371 பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனத்திற்காக அறைகள் நிரம்பி லேபாக்சி சந்திப்பு வரை பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

அப்போது கூட்ட நெரிசல் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பெண் ஒருவர் தன்னை இடித்துவிட்டு முன்னே செல்ல முயன்ற பக்தரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று அதிகாலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகள் நிரம்பி லேபாக்சி சந்திப்பு வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

இவர்கள் சுவாமியை தரிசிக்க 24 மணி நேரத்திற்கு மேல் ஆகும் என தெரிகிறது. மேலும் ரூ300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கோயிலில் ரூ3. 13 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருமலையில் பக்தர்கள் வருகை அதிகளவில் இருப்பதால் ஓய்வறைகள் நிரம்பியுள்ளது.

அறைகள் கிடைக்காத பக்தர்கள் கோயில் முன்பும் திறந்த வெளியில் கொட்டும் பனியில் தங்கியுள்ளனர். ஏழுமலையான் கோயிலில் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு இன்றுவரை திவ்ய தரிசன டிக்கெட், சர்வ தரிசன டிக்கெட்டில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இலவச தரிசன வரிசையிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை