பூஷண் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ4,025 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
பூஷண் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ4,025 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: ஒடிசாவில் உள்ள பூஷண் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ4,025 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பூஷண் மின்சாரம் மற்றும் உருக்கு நிறுவனம் (பிபிஎஸ்எல்), பல்வேறு வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி இருந்தது.

ஆனால் அப்பணத்தை முறைகேடாக வெவ்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், சட்டவிரோத பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அந்த நிறுவனம் மீது அமலாக்கத்துறை சார்பில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குபதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில், ஒடிசா மாநிலத்தில் பூஷண் உருக்கு நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள், தொழிற்சாலை, இயந்திரங்கள் உள்பட ரூ. 4,025 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை தற்ேபாது முடக்கி உள்ளது.

மேலும், சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகள் தொடரும் என்று அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சொத்துகளை முடக்கி வரும் நிலையில், சிபிஐ தரப்பில் மேற்கண்ட நிறுவனத்தின் மீது கிரிமினல் சதி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், அந்நிறுவனத்தின் சிஎம்டி சஞ்சய் சிங்கல் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.


.

மூலக்கதை