விக்கிரவாண்டி தொகுதியில் 2வது நாளாக பிரசாரம்: அக்கிரம, அநியாய ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்... மு.க.ஸ்டாலின் ஆவேசம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
விக்கிரவாண்டி தொகுதியில் 2வது நாளாக பிரசாரம்: அக்கிரம, அநியாய ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்... மு.க.ஸ்டாலின் ஆவேசம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் இன்று இரண்டாவது நாளாக கப்பியாம்புலியூர், பனையபுரம், வி. சாலை ஆகிய பகுதிகளில் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னை உள்ளது.

நான் வசிக்கும் சென்னையில் குடிநீருக்காக காலி குடங்களுடன் தாய்மார்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட நிலை இங்கு மட்டும் அல்ல, தமிழகம் முழுவதும் உள்ளது.

முதியோர் உதவித் தொகை, 100 நாள் வேலை, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் கொடுக்காமல் இருப்பது போன்ற பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
திமுக ஆட்சியில் தான் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு யாருடைய தயவும் இன்றி மகளிர் சொந்த காலில் நிற்க நான் துணை முதல்வராக இருந்தபோது, இந்த திட்டத்தை வழி நடத்திச் சென்றேன்.

5 ஆண்டுகளில் எல்லா மாவட்டங்களுக்கும் நானே சென்று 5, 6 மணி நேரம் நின்று கொண்டே சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உதவிகளை வழங்குவேன்.

ஆனால் இன்று சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கப்படுகிறதா? அவைகள் சின்னாபின்னமாக உள்ளன. உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தமிழகம் முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் இன்றி பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கொண்டு சாலை, ரேஷன், குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.

ஆனால், தற்போது உள்ளாட்சி ேதர்தல் நடத்தப்படாமல் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.

தமிழகத்தில் பொதுப்பணித்துறை, சுகாதாரம், நெடுஞ்சாலைத்துறை என எல்லா துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது.

குட்கா விற்பனைக்கு அரசு தடை விதித்திருந்தது. ஆனால் தமிழகம் முழுவதும் இன்று பெட்டிக் கடைகள் தோறும் சர்வ சாதாரணமாக ஏன் மாணவர்கள் படிக்கும் பள்ளி, கல்லூரிகள் அருகிலும் இந்த குட்கா விற்பனை நடந்து வருகிறது.

இதை தடுக்க வேண்டிய காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டு உள்ளது. ஏன் என்றால் ஆட்சியாளர்களுக்கு மாமூல் கொடுப்பதால் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

சென்ைனயில் ஒரு இடத்தில் குட்கா ரெய்டு நடத்தி வருமான வரித்துறையினர் ஆவணங்களை கைப்பற்றினார்கள். அந்த ஆவணங்களில் மாமூல் வாங்கிய பெயரில் முதல் பெயரே சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் தான் இருந்தது.

தவறு செய்பவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டியது போலீசார் கடமை. ஆனால் அப்போது டிஜிபியாக இருந்தவருக்கும் மாமூல் கொடுத்ததாக ஆவணத்தில் இருந்தது.

இவர்களுக்கு உடந்தையாக அதிமுக ஆட்சி செயல்படுகிறது. பிஜேபி துணை போகிறது.

தமிழ்நாட்டில் நடக்கும் அக்கிரம, அநியாய ஆட்சிக்கு இடைத்தேர்தல் மூலம் முடிவு கட்ட வேண்டும்.

இவ்வாறு மு. க. ஸ்டாலின் பேசினார்.

.

மூலக்கதை