பார் வசதி இல்லாத டாஸ்மாக் கடைகள் எத்தனை?.. ஆய்வு செய்ய நிர்வாகம் உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பார் வசதி இல்லாத டாஸ்மாக் கடைகள் எத்தனை?.. ஆய்வு செய்ய நிர்வாகம் உத்தரவு

சென்னை: பார் வசதி இல்லாத டாஸ்மாக் கடைகள் எத்தனை உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்ய டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை ஒட்டி 1,872 பார்கள் செயல்பட்டு வருகின்றன.

பெரும்பாலான இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் அரசு அனுமதி பெறாமல் பார்கள் இயங்கி வருவதாக தலைமை அலுவலகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த புகாரின் பேரில் அனுமதி பெறாமல் இயங்கும் டாஸ்மாக் பார்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க நிர்வாகம் உத்தரவிட்டது.

தீவிர சோதனை நடைபெற்றாலும் சட்டத்திற்கு புறம்பான டாஸ்மாக் பார்களை மூடுவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இந்தநிலையில், கடந்த மாதம் டாஸ்மாக் பார்களுக்கு புதிய டெண்டர் விடப்பட்டது.



இந்த டெண்டரின் மூலம் டாஸ்மாக் கடைகளுக்கு அருகே கண்டிப்பாக பார்களை அமைக்க வேண்டும் எனவும், அதற்குரிய நடவடிக்கையில் மாவட்ட மேலாளர்கள் ஈடுபடவும் நிர்வாகம் அறிவுறுத்தியது. இதனால், சட்டத்திற்கு புறம்பான பார்களை தடுக்கும் பொருட்டு பார் உரிமையாளர்கள் மத்தியில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் சட்டத்திற்கு புறம்பான பார்களை மூட முழு ஒத்துழைப்பு வழங்குமாறு பார் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். புதிய டெண்டரின் மூலம் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பார்கள் தற்போது நிறுவப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பார்கள் இல்லாத டாஸ்மாக் கடைகள் எத்தனை உள்ளது என்பது குறித்து கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய டெண்டரின் மூலம் பார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.



இருந்தாலும் இன்னும் பல இடங்களில் அரசு அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக பார்கள் செயல்பட்டு வருவதாக புகார் வந்துள்ளது. அனைத்து கடைகளுக்கு அருகிலேயும் அரசு அனுமதி பெற்ற பார்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி சட்டத்திற்கு புறம்பான பார்களை முழுமையாக ஒழிக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், எத்தனை டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் இன்னும் பார்கள் இல்லை என்பது குறித்து கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஓரிரு வாரங்களில் முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பான பார்கள் செயல்படுவது கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அதை உடனடியாக மூடி பார் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை