விவசாயம், கல்விக் கடன் தள்ளுபடியாகாத நிலையில் வாராக்கடன் ரூ.2.75 லட்சம் கோடி தள்ளுபடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
விவசாயம், கல்விக் கடன் தள்ளுபடியாகாத நிலையில் வாராக்கடன் ரூ.2.75 லட்சம் கோடி தள்ளுபடி

புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கிக்கு, வங்கிகள் தள்ளுபடி செய்த வாராக்கடன்கள் குறித்த தகவல்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் வெளியிடலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தனியார் செய்தி நிறுவனம் ஒன்று ஆர்டிஐ மூலம் வாராக்கடன் குறித்த தகவல்களை பெற்று வெளியிட்டுள்ளது.

அதாவது, ரூ. 500 மற்றும் ரூ. 100 கோடிக்கு மேல் கடன் பெற்று, திருப்பி செலுத்த முடியாமல் திவாலான வாடிக்கையாளர்களின் கடன்களை எந்தெந்த வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன என்ற விவரத்தை வெளியிட்டுள்ளது.

மேற்கண்ட தகவலின்படி பாரத ஸ்டேட் வங்கியானது ரூ. 100 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் பெற்றுள்ள 220 கடனாளிகளின் ரூ. 76,600 கோடியை தள்ளுபடி செய்துள்ளது. அதேபோல், ரூ. 500 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் பெற்றுள்ள கடனாளிகளின் ரூ. 37,700 கோடி ஸ்டேட் வங்கியால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மொத்தத்தில் ரூ. 100 கோடிக்கு மேல் கடன் வாங்கிய 980 வாடிக்கையாளர்களின் வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் மட்டுமே 220 பேர்.

அதாவது ஐந்தில் ஒருபங்கு. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சராசரியாக ரூ. 348 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், பஞ்சாப் நேஷனல் வங்கியும் ரூ. 100 கோடிக்கு மேல் கடன் வாங்கிய 94 வாடிக்கையாளர்களின் வாராக்கடனையும் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மொத்த தொகை ரூ. 27,024 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ரூ. 500 கோடிக்கு மேல் கடன் பெற்ற 12 தொழிலதிபர்களின் வாராக்கடன் ரூ. 9,037 கோடியை தள்ளுபடி செய்துள்ளது.

மொத்தமாக, ரூ. 100 கோடிக்கு மேல் வங்கிகளிடம் இருந்து தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை ரூ2. 75 லட்சம் கோடி என்ற அதிர்ச்சி தகவல், ஆர்டிஐ மூலம் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே விவசாயக் கடன், கல்விக் கடன் வாங்கியவர்கள், கடனையும், வட்டியையும் செலுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு எதிராக வங்கியாளர்கள் ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகளில் இறங்கி மிரட்டல் விடுப்பது தொடர்கதையாக உள்ளது.

அதேபோல், ரிசர்வ் வங்கி 2018-19ம் நிதியாண்டின் உபரி நிதியான ஒரு லட்சத்து 23,000 கோடி ரூபாயும், திருத்தி அமைக்கப்பட்ட பொருளாதார முதலீட்டு வழிகாட்டுதலின் படி கண்டறியப்பட்ட உபரி நிதி 53,000 கோடி ரூபாயையும் மத்திய அரசுக்கு வழங்க ஒப்புதல் அளித்தது.

இவ்வாறு, உபரி நிதியை மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் பெற்றும், வாராக்கடனை வசதியான பெரும் பணக்காரர்களுக்கு தள்ளுபடி செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

.

மூலக்கதை