நோபல் பரிசு பெற்ற வங்கதேச பொருளாதார நிபுணருக்கு கைது வாரன்ட்

தினகரன்  தினகரன்
நோபல் பரிசு பெற்ற வங்கதேச பொருளாதார நிபுணருக்கு கைது வாரன்ட்

தாகா: தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கிய வழக்கில், நோபல் பரிசு பெற்ற வங்கதேச பொருளாதார நிபுணர் முகமது யூனசுக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தை சேர்ந்தவர் முகமது யூனஸ் (79). பொருளாதார  நிபுணரான இவர் நோபல் பரிசு பெற்றவர். இவர் வங்கதேசத்தில் உள்ள ‘கிரமீன் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற நிறுவனத்தின் தலைவராக உள்ளார். தொழிற்சங்கம் அமைத்த குற்றச்சாட்டுக்காக இந்நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர் டிஸ்மிஸ்  செய்யப்பட்டனர். இவர்கள் தாகா நீதிமன்றத்தில் கிரமீன் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நிறுவனத் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், சம்மனை பெறுவதற்கு முன்பே முகமது யூனஸ் வெளிநாடு சென்றுவிட்டார். அதனால், கிரமீன்  கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் சீனியர் மானேஜர் ஆகியோர் மட்டும் ஆஜராகி ஜாமீன் பெற்றனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராகாத முகமது யூனசுக்கு கைது வாரன்ட் பிறப்பிக்க தாகா நீதிமன்ற  நீதிபதி நேற்று உத்தரவிட்டார். முகமது யூனஸ், வங்கதேசம் திரும்பியதும், தேவையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை