பொருளாதார போட்டி திறனில் 10 இடம் பின்தங்கியது இந்தியா

தினகரன்  தினகரன்
பொருளாதார போட்டி திறனில் 10 இடம் பின்தங்கியது இந்தியா

புதுடெல்லி: உலக பொருளாதார நாடுகளில் போட்டி திறன் தரவரிசை பட்டியலில் இந்தியா 10 இடங்கள் பின்தங்கியுள்ளது.  ஜெனீவாவில் உள்ள உலக பொருளாதார கூட்டமைப்பு, உலக நாடுகளின் பொருளாதார போட்டித்திறன் குறியீடு தர  வரிசையை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு 58வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 10 இடங்கள் பின்தங்கி 68வது இடத்தை பெற்றுள்ளது. ஒரே ஆண்டில் 10 இடங்கள் பின்னோக்கி சென்றது மோசமான பின்னடைவாக  கருதப்படுகிறது. பிரிக்ஸ் நாடுகளில் பிரேசில் 71வது இடத்தை பெற்று மோசமான இடத்தை பெற்றுள்ளது.  இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை (84), வங்க தேசம் (105), நேபாளம் (108), பாகிஸ்தான் (110வது) இடங்களை பெற்றுள்ளன.  அமெரிக்காவை 2வது இடத்துக்கு தள்ளி, சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. ஹாங்காங் (3), நெதர்லாந்து (4), சுவிட்சர்லாந்து (5வது) இடங்களை பிடித்துள்ளன. ஐஎம்எப் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய, அந்த அமைப்பின்  இயக்குநர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா, ‘‘உலகில் 90 சதவீத நாடுகள் பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் இந்தியாவின் நிலைமை படு மோசம்’’ என கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை