கண்டன தீர்மானம்: டொனல்டு டிரம்ப் புலம்பல்

தினமலர்  தினமலர்
கண்டன தீர்மானம்: டொனல்டு டிரம்ப் புலம்பல்

வாஷிங்டன்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மோசடி செய்ய முயன்றதாக கொண்டு வரப்பட்டுள்ள கண்டன தீர்மானத்துக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்னை, உச்ச நீதிமன்றம் வரை செல்லும் என, அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட, அதிபராக உள்ள, டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார். எதிர்க்கட்சியான, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட, முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன் முயற்சித்து வருகிறார்.இந்த நிலையில், ஜோ பிடன் குறித்து அவதூறு பரப்ப உதவும்படி, ஐரோப்பிய நாடான, உக்ரைன் அதிபர் விளோதிமிர் ஜெலன்ஸ்கியின் உதவியை, டிரம்ப் நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாயின. உக்ரைன் அதிபருடன், டிரம்ப் தொலைபேசியில் பேசிய விபரத்தை, சமூக ஆர்வலர் ஒருவர் வெளியிட்டார்.
அதையடுத்து, டிரம்புக்கு எதிராக, ஜனநாயகக் கட்சி, கண்டன தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.இது குறித்து, டிரம்ப் கூறியதாவது:என்னையும், குடியரசு கட்சியையும் இழிவுபடுத்த, ஜனநாயகக் கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். இந்தப் பிரச்னை, உச்ச நீதிமன்றம் வரை செல்லும் என எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையில், ஜோ பிடன், முதல் முறையாக, இந்தப் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். "கண்டன தீர்மான விசாரணைக்கு ஒத்துழைக்க அதிபரின் வெள்ளை மாளிகை மறுத்துள்ளது, அமெரிக்க ஜனநாயகத்துக்கு எதிரானது; பதவிக்கான அதிகாரத்தை மீறிய செயல்," என, பிடன் கூறியுள்ளார்.


மூலக்கதை