சீன அதிபருக்கு இன்று இரவு விருந்து கடற்கரை கோவிலில் தடபுடல் ஏற்பாடு

தினமலர்  தினமலர்
சீன அதிபருக்கு இன்று இரவு விருந்து கடற்கரை கோவிலில் தடபுடல் ஏற்பாடு

சீன அதிபருக்கு, மாமல்லபுரம் கடற்கரை கோவிலில், இன்று இரவு விருந்து அளிக்கப்பட உள்ளது.சீன அதிபர் ஜி ஜின்பிங், இன்று பகல் சென்னை வருகிறார். சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில், மதிய உணவு உட்கொள்கிறார். மாலை, 4:00 மணிக்கு, சாலை மார்க்கமாக மாமல்லபுரம் செல்கிறார். அங்குள்ள கடற்கரை கோவிலில், பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது, இரண்டு மொழி பெயர்ப்பாளர்கள் மட்டுமே உடன் இருப்பர்.

இதைத் தொடர்ந்து, அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை ஆகிய இடங்களுக்கு, இருவரும் நடந்தே செல்கின்றனர். பின், அதிகாரிகள் மட்டத்திலான பேச்சில், இருவரும் பங்கேற்கின்றனர். அங்கு நடக்கும் இந்திய கலாச்சார நிகழ்ச்சிகளையும், இருவரும் பார்வையிடுகின்றனர்.கடற்கரை கோவில் வளாகத்திலேயே, புல் தரையில் அமர்ந்து, பிரதமரும், சீன அதிபரும், இரவு உணவு சாப்பிடுகின்றனர். இந்த விருந்தில், இந்தியாவின் பிரசித்தி பெற்ற உணவு வகைகள் இடம் பெறுகின்றன; தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளும் இடம் பெறும்.
மாமல்லபுரத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் இருந்து, இந்த உணவுகள் எடுத்து வரப்பட உள்ளன. இரவு உணவை முடித்த பின், சென்னை திரும்பும் சீன அதிபர், நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். பிரதமர் மோடி, மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில், இரவு தங்குகிறார்.
நாளை காலை, நட்சத்திர ஓட்டலிலேயே, சீன அதிபர் காலை உணவு சாப்பிடுகிறார். அங்கிருந்து புறப்பட்டு, மாமல்லபுரம் செல்லும் சீன அதிபர், மீண்டும் பிரதமருடன் பேச்சு நடத்துகிறார். பிற்பகலில், அங்குள்ள நட்சத்திர ஓட்டலில், சீன அதிபருக்கு விசேஷ விருந்து அளிக்கப்படுகிறது.
மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், சீன அதிகாரிகள் குழுவுக்கும், தனித்தனியாக விருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.*- நமது நிருபர் -


மூலக்கதை