ஜிஎஸ்டி வரி வசூல் 2.67% குறைவு: சீர்திருத்தங்கள் குறித்து ஆராய பரிந்துரை குழுவிற்கு மத்திய அரசு உத்தரவு

தினகரன்  தினகரன்
ஜிஎஸ்டி வரி வசூல் 2.67% குறைவு: சீர்திருத்தங்கள் குறித்து ஆராய பரிந்துரை குழுவிற்கு மத்திய அரசு உத்தரவு

டெல்லி: ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ளும் வகையில், புதிய குழுவை அமைத்துள்ள மத்திய அரசு, 15 நாட்களில் அறிக்கை  தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,  கடந்த மாதத்தில் ஜிஎஸ்டி 91,916 கோடி வசூல் ஆகியுள்ளன. இது கடந்த ஆண்டு செப்டம்பர் வசூலை விட 2.67 சதவீதம் குறைவு. கடந்த ஆண்டு  செப்டம்பரில் ஜிஎஸ்டி 94,442 கோடி வசூல் ஆகியிருந்தது. கடந்த மாத ஜிஎஸ்டி வசூலில் மத்திய ஜிஎஸ்டி 16,630 கோடி, மாநில ஜிஎஸ்டி 22,598 கோடி,  ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 45,069 கோடி. இதில் இறக்குமதி மூலம் வசூலான 22,097 கோடி  அடக்கம். செஸ் வரி 7,620 கோடி  வசூல் ஆகியுள்ளது. இதில் இறக்குமதி மூலம் 728 கோடி வசூல்  செய்யப்பட்டுள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான 75.94 லட்சம் ஜிஎஸ்டிஆர் 3பி படிவங்கள், கடந்த மாதம்  30ம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த மாத ஜிஎஸ்டி வசூல் 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்த பட்ச அளவாக  கருதப்படுகிறது.இத்துடன் பொருளாதார மந்தமும் சேர்ந்துகொண்டுள்ள நிலையில், ஜிஎஸ்டி வரி முறையில் அமைப்பு ரீதியான மாற்றங்களை கொண்டுவருவது  நிலைமையே மேம்படுத்த உதவும் என அரசு கருதுகிறது. இதை உணர்த்தும் வகையில், 15 நாட்களுக்குள் முதல் அறிக்கையை தாக்கல் செய்ய  வேண்டும் என்ற உத்தரவுடன் ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான பரிந்துரை குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. ஜிஎஸ்டி வரிமுறையில் செய்ய  வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராயுமாறு கமிட்டிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி தவறாக பயன்படுத்தப்படுவதை தடுத்தல், சம்மந்தப்பட்டவர்கள் தாங்களாக முன்வந்து வரிதாக்கல் செய்வதை மேம்படுத்துதல்  ஆகியவற்றிற்கான வழிமுறைகள் குறித்து பரிந்துரைக்குமாறு குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வரிஏய்ப்பு தடுப்பு, வரி தாக்கல் முறையாக  செய்யப்படுகிறதா என்ற கண்காணிப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கும் வழிமுறைகளை பரிந்துரைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கொள்கை  ரீதியாக எடுக்கப்பட வேண்டிய முடிவுகள், சட்டத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், வரி விதிப்பை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள்  குறித்தும் பரிந்துரைக்க குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த குழுவில் தமிழ்நாடு, மேற்குவங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் இருந்து வரித்துறை உயரதிகாரிகள்  இடம்பெறுகின்றனர். பிற மாநிலங்களை சேர்ந்தவர்களின் ஆலோசனைகளையும் ஏற்கத் தயாராக இருப்பதாக ஜிஎஸ்டி கவுன்சில் செயலகம்  தெரிவித்துள்ளது.

மூலக்கதை