இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் 2018 மற்றும் 2019: போலந்து எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸுக், ஆஸ்திரியாவின் பீட்டர் ஹண்ட்கேவுக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு

தினகரன்  தினகரன்
இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் 2018 மற்றும் 2019: போலந்து எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸுக், ஆஸ்திரியாவின் பீட்டர் ஹண்ட்கேவுக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு

ஸ்வீடன்: 2018 மற்றும் 2019ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள், போலந்து எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸுக் மற்றும் பீட்டர் ஹண்ட்கேவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் ஒவ்வொரு வருடமும் நோபல் பரிசு கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு துறையான இலக்கியத்திற்கான நோபல் பரிசை தேர்ந்தெடுத்து பரிந்துரைக்கும் பணியை ஸ்வீடன் இலக்கிய அகாடமி மேற்கொண்டு வந்தது. கடந்த ஆண்டு, இந்த அகாடமியின் உறுப்பினர் ஒருவரின் கணவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன் முடிவுகளை அவர் முன்கூட்டியே வெளியே பகிர்ந்துவிட்டதாகவும் புகார் எழுந்தது. இந்தப் பிரச்னை மிகப்பெரியதாக வெடித்தது. நோபல் பரிசின் நம்பகத்தன்மை போய்விட்டதாக பலரும் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து இலக்கியத்திற்கான நோபல் பரிசை அறிவிக்காமல் நோபல் அறக்கட்டளை நிறுத்தி வைத்தது. இதுகுறித்து கடந்த வருடத்தில் அறிக்கை வெளியிட்ட நோபல் அறக்கட்டளை, நோபல் தேர்வுக்குழுவின் மீது மக்களுக்கான நம்பிக்கை குறைந்துள்ளது. இந்த நேரத்தில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்குவது சரியாகாது. அதனால் 2018ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படாது என்றும் இந்தப் பரிசு 2019ம் ஆண்டுடன் சேர்த்து வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. இந்நிலையில், அந்தப் புகார் தொடர்பான சர்ச்சைகள் ஓய்ந்ததை அடுத்து, இலக்கியத்திற்கான இரண்டு நோபல் விருதுகளை அறிவிக்கப் போவதாக நோபல் அறக்கட்டளை தெரிவித்திருந்தது. அதன்படி, 2018 மற்றும் 2019ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 2018ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு போலந்து எழுத்தாளர் வோல்கா டோகார்ஸுக்கு(57) வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2019ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆஸ்திரிய நாடக ஆசிரியரும் நாவலாசிரியருமான பீட்டர் ஹண்ட்கேவுக்கு(76) வழங்கப்படுகிறது. தனது மொழியியல் புத்தி கூர்மை மூலம் சுற்றளவு மற்றும் மனித அனுபவத்தின் தனித்துவத்தை ஆராய்ந்த ஒரு செல்வாக்குமிக்க படைப்புக்காக, இவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அந்த அகாடமி தெரிவித்துள்ளது. இதேபோல், வாழ்க்கையின் ஒரு வடிவமாக எல்லைகளை கடப்பதை, கலைக்களஞ்சிய ஆர்வத்துடன் ஒரு கற்பனை கதையை கொடுத்துள்ளதற்காக வோல்கா டோகார்ஸுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை