மத்திய அரசை எதிர்க்கும் அளவிற்கு தமிழக அரசுக்கு முதுகெலும்பு கிடையாது: பிரசாரத்தில் வைகோ பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய அரசை எதிர்க்கும் அளவிற்கு தமிழக அரசுக்கு முதுகெலும்பு கிடையாது: பிரசாரத்தில் வைகோ பேச்சு

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. திமுகவில் புகழேந்தியும், அதிமுகவில் முத்தமிழ்ச்செல்வனும் போட்டியிடுகின்றனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து கெடார், விக்கிரவாண்டி பகுதிகளில் மதிமுக தலைவர் வைகோ நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இன்று தமிழகத்தில் படித்த இளைஞர்களின் எதிர்காலம் பாழாகிவிட்டது.

தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல்.

இதனால் இங்கே விஸ்தரிக்கப்பட இருந்த கார் தொழிற்சாலை வெளிமாநிலமான குஜராத்துக்கு கொண்டு சென்றுவிட்டது. தமிழகத்தில் காவல்துறைக்கு, வாக்கி டாக்கி வாங்கியதிலும் ஊழல், பருப்பு வாங்கியதிலும் ஊழல் என ரூ. 400 கோடி ஊழல், இந்த அரசாங்கம் முழுக்க முழுக்க ஊழல் அரசாங்கமாக உள்ளது.

முதல்வர் மீது ஊழல், துணை முதல்வர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளது. ரயில்வே துறையில் தமிழர்களுக்கு வேலை இல்லை.

அண்டை மாநிலத்தவர்களுக்கு தான் வேலை. மத்திய அரசு துறையில் தமிழர்களுக்கு இனிமேல் வேலை இல்லை.

மத்திய அரசு சமஸ்கிருதத்தில் பகவத்கீதையையும், இந்தியையும் கொண்டு வந்து திணிக்கின்றனர். இதையெல்லாம் எதிர்த்து மத்திய அரசை கேட்க தமிழக அரசுக்கு தைரியம் இல்லை.

தமிழக அரசுக்கு, மத்திய அரசை எதிர்க்கும் அளவிற்கு முதுகெலும்பு கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

ஒரே நாளில் பிரசாரம்

விக்கிரவாண்டி தொகுதியில் ஒரே நாளில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர்.

திமுக தலைவர் மு. க ஸ்டாலின் 12ம் தேதி மாலை 4 மணிக்கு காணையில் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து கல்பட்டு, மல்லிகைப்பட்டு, கெடார், சூரப்பட்டு, அன்னியூர், அத்தியூர்திருக்கை, வெங்கமூரிலும், 13ம் தேதி மாலை நல்லப்பாளையத்தில் தொடங்கி கடையனம், பனமலை, சங்கீதமங்கலம், கல்யாணம்பூண்டி, மேல்காரணை, கஞ்சனூர் கூட்டுரோடு, நேமூர், எசாலம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 12ம் தேதி முண்டியம்பாக்கம், ராதாபுரம், விக்கிரவாண்டி, டி. புதுப்பாளையம், வி. சாத்தனூரில் பிரசாரம் செய்கிறார்.

புதிய தமிழகம் எதிர்ப்பு

கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த புதிய தமிழகம் கட்சி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தங்களது கட்சி கொடியை பயன்படுத்த அதிமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட செயலாளர் ரகுநாதன் கூறுகையில், தற்போது எங்கள் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் உத்தரவுபடி இடைத்தேர்தலில் பணியாற்றவில்லை.

அதிமுக தரப்பில் விக்கிரவாண்டி தொகுதியில் எங்கள் கட்சி கொடியை பயன்படுத்தி வருகின்றனர்.

எங்கள் அனுமதியில்லாம் கட்சி கொடியை பயன்படுத்தக்கூடாது என்றார்.

.

மூலக்கதை