பிளஸ்2 மாணவி எரித்து கொலை தீ குளித்து வாலிபர் தற்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிளஸ்2 மாணவி எரித்து கொலை தீ குளித்து வாலிபர் தற்கொலை

திருவனந்தபுரம்: காதலை ஏற்க மறுத்த பிளஸ்2 மாணவியை இன்று அதிகாலை வீட்டுக்குள் புகுந்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற வாலிபர் தானும் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொச்சி காக்கநாடு பகுதியை சேர்ந்தவர் ஷாலன்.

இவரது மகள் தேவிகா (17). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

எர்ணாகுளம் வடக்கு பரவூர் பகுதியை சேர்ந்தவர் மிதுன். பெயின்டிங் தொழிலாளி.

இவர் மாணவி தேவிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

தேவிகா 8ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே அவரை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்து வந்துள்ளார்.   ஆனால் தேவிகா அவரை காதலிக்க மறுத்து வந்துள்ளார். இதனால் தேவிகா மீது மிதுன் கொலை வெறியில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு ஷாலன் மற்றும் குடும்பத்தினர் சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல் வீட்டில் தூங்கினர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் மிதுன் பெட்ரோல் கேனுடன் பைக்கில் தேவிகா வீட்டுக்கு சென்றார். வீட்டின் முன்பு நின்றுகொண்டு சிறிது பெட்ரோலை தனது உடலில் ஊற்றியுள்ளார்.

பின்னர் வீட்டின் கதவை பலமாக தட்டினார்.

அப்போது ஷாலன் கதவை திறந்தார். கதவு திறந்ததும் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து தேவிகா எங்கே என்று சத்தம் போட்டவாறு உள்ளே நுழைந்துள்ளார்.

சத்தம் கேட்டு தேவிகாவும் எழுந்து வந்து கொண்டிருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் வீட்டில் உள்ளவர்கள் என்ன நடக்கிறது என்பதை உணவதற்குள் தேவிகாவின் உடலில் மிதுன் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.

தீ மளமளவென எரிந்ததால் தேவிகா உடல் கருகியது. வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.

அவரை காப்பாற்ற வீட்டில் உள்ளவர்கள் முயற்சித்தனர்.

அதன் பின்னரும் வெறி அடங்காமல் கத்திய மிதுன் வீட்டிற்கு வெளியே வந்து வீட்டின் முன்பு நின்று கொண்டு மீதம் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்தார். சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர்.

அதற்குள் தேவிகா உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மிதுனை அக்கம் பக்கத்தினர் மீட்டனர்.

தொடர்ந்து அவரை எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவரும் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து காக்கநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஒரு காதலை விவகாரத்தில் பள்ளி மாணவியை எரித்துக் கொலை செய்து விட்டு, காதலனும் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.

மூலக்கதை