கர்நாடக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் ஆரம்பம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கர்நாடக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் ஆரம்பம்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அதே சமயத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் கர்நாடக மாநில விவசாய சங்கம் ஆகியவை பெங்களூருவில் பிரமாண்ட பேரணி நடத்துகின்றன.

கர்நாடக மாநில சட்டபேரவையின் சிறப்பு கூட்டத் தொடரை  நடத்த முதல்வர் பி. எஸ். எடியூரப்பா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று பேரவை மற்றும் மேலவை கூட்டத்தொடர் தொடங்கியது.

மூன்று நாட்கள் நடக்கிறது. மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான ஆட்சி அமைந்து 2 மாதம் முடிந்துள்ளது.

ஏற்கனவே பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தி முடித்துள்ள நிலையில், பாஜ அரசின் இரண்டாவது சட்டப்பேரவை கூட்டமாக இது அமைகிறது.

மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழை காரணமாக 22 மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டது. 17 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் 80க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

ஆயிரக்கணக்கான கால்நடைகள் மாண்டு போனது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.

மழையால் ரூ. 38 ஆயிரம் கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அரசு கணக்கிட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் நிவாரண நிதி வழங்காமல் இழுத்தடிப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், கடந்த சனிக்கிழமை வெள்ள நிவாரண நிதியாக ரூ. 1,200 கோடி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் முடிவு ஆளும் பாஜவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இருப்பினும் ரூ. 10 ஆயிரம் கோடி நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பது எதிர்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது.

இப்பிரச்னையை இந்த கூட்டத்தொடரில் எழுப்ப எதிர்கட்சிகள் தயாராகி வருகிறது.

இந்நிலையில் பேரவை கூட்டத்தொடரில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து மூன்று கட்சிகளும் நேற்று தங்கள் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினர். முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடந்த பாஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில், பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் சரியான பதில் கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையிலும் மஜத எம்எல்ஏக்கள் கூட்டம் முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையிலும் நடந்தது. இரு கட்சி கூட்டத்திலும் வெள்ளி நிவாரண பணிகள் மேற்கொள்வதில் காட்டி வரும் அலட்சியத்தை மையமாக வைத்து குரல் எழுப்ப தீர்மானிக்கப்பட்டது.

அரசுக்கு எதிராக போராட்டம்

சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில், வெள்ள நிவாரண பணிகளை மாநில அரசு சரியாக கையாளவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கவில்லை, விவசாயிகள் கடன் தள்ளுப்படி திட்டம் சரியாக செயல்படுத்தவில்லை என்பது உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்து மஜத சார்பில் இன்று காலை 11. 30 மணிக்கு சேஷாத்திரிபுரத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து விதானசவுதா நோக்கி ஊர்வலம் புறப்பட்டது. முன்னாள் பிரதமரும் கட்சியின் தேசிய தலைவருமான எச். டி. தேவகவுடா தலைமையில் நடக்கும் பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

அதேபோல் விவசாயிகள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த கர்நாடக மாநில விவசாய சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் தலைமையில் விதானசவுதா முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து அனந்தராவ் சர்க்கிள், சேஷாத்திரி சாலை வழியாக சுதந்திர பூங்கா சென்று அங்கிருந்து விதான சவுதா நோக்கி பேரணி செல்கிறது.

இதில் கலந்துகொள்வதற்காக மாநிலத்தின் பல மாவட்டங்களில் இருந்து ரயில், பஸ், தனியார் டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் விவசாயிகள் கூட்டம் கூட்டமாக வந்த வண்ணமுள்ளனர். விவசாயிகள் பேரணியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த பாதுகாப்பு

மஜத மற்றும் கர்நாடக மாநில விவசாய சங்கம் ஆகியவை நடத்தும் பேரணி காரணமாக இன்று முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என்பதால் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க விதானசவுதா வளாகம் சுற்றி 144வது தடை உத்தரவு இன்று காலை 6 மணி முதல் பிறப்பிக்கப்படுகிறது. பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், 3 பெட்டாலியன் மத்திய ஆயுதப்படை போலீசார், 5 பெட்டாலியன் கர்நாடக மாநில ஆயுதப்படை போலீசார், சிஏஆர், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனம், கண்ணீ–்ர் புகை குண்டுகள் வீசும் வாகனம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு வருகிறார்.

தென்மண்டல போலீஸ் ஐஜிபி சரத்சந்திரா வழி காட்டுதலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

.

மூலக்கதை