தமிழகத்தில் முதன் முறை கைத்தறி போர்வை விற்பனையை அதிகரிக்க நடமாடும் அரசு பஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் முதன் முறை கைத்தறி போர்வை விற்பனையை அதிகரிக்க நடமாடும் அரசு பஸ்

சென்னிமலை: தமிழகத்தில் முதன் முறையாக சென்னிமலை கைத்தறி போர்வைகளை விற்பனை செய்ய நடமாடும் பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தை நாளை (11ம் தேதி) தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார்.

ஈரோடு மாவட்டத்தில், சென்னிமலை கைத்தறி போர்வைகளுக்கு பெயர் பெற்றவையாகும். இங்கு 30க்கும் மேற்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகிறது.

இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினராக இருந்து வருகின்றனர். தற்போது கைத்தறி போர்வைகளின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு நடமாடும் பேருந்து ஒன்றை தயாரித்து அதன் மூலம் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடையே நேரில் சென்று விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது.

இதற்காக சென்னிமலை சென்குமார் நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு அரசு சார்பில் சுமார் 10 லட்சம் மதிப்பிலான பேருந்து ஒன்று வழங்கப்பட்டது.

இந்த பேருந்தில் போர்வைகள் அடுக்கி வைக்க தனி தனியே அறைகள் ஒதுக்கியும், பொதுமக்கள் உள்ளே சென்று போர்வைகளை பார்வையிட்டு திரும்பி வரவும், உள்ளேயே பணம் பெற்றுக்கொண்டு ரசீது வழங்க காசாளர் மேஜையும் இருப்பதுபோல வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் விற்பனை அதிகரித்தால் அனைத்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கும் தமிழக அரசு சார்பில் இந்த பேருந்து வடிவமைத்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்வை விற்பனைக்கான பேருந்து நேற்று சென்னிமலையில் இருந்து சென்னைக்கு கிளம்பியது.

இந்த பேருந்தை தமிழக முதல்வர் நாளை (11ம் தேதி) துவக்கி வைக்கிறார்.

.

மூலக்கதை