பிரதமர் மோடி-சீன அதிபர் நாளை சந்திப்பு: மாமல்லபுரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரதமர் மோடிசீன அதிபர் நாளை சந்திப்பு: மாமல்லபுரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு

திருக்கழுக்குன்றம்: சீன அதிபர் ஜின்பிங், அரசு முறை பயணமாக நாளை தமிழகம் வருகிறார். அவரை பிரதமர் மோடி வரவேற்கிறார்.

சென்னை விமான நிலையத்தில், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. விமான நிலைய வளாகத்தில் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட தமிழக பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

பின்னர், கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் சீன அதிபர் தங்குகிறார். மோடி, கோவளத்தில்  தாஜ் ஓட்டலில் தங்குகிறார்.
நாளை மதியம் இரு நாட்டு தலைவர்களும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகிறார்கள்.

அங்குள்ள அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம் ஆகிய இடங்களை பார்வையிடுகிறார்கள். பின்னர் ஒன்றாக புகைப்படம் எடுத்து கொள்கிறார்கள்.

மாலையில் கடற்கரை கோயில் அருகே நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றனர்.

சீன அதிபரின் வருகையையொட்டி சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சீனாவில் இருந்து வந்துள்ள பாதுகாப்பு அதிகாரிகளும், டெல்லியில் இருந்து வந்துள்ள மத்திய பாதுகாப்பு குழுவினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி மற்றும் அதிகாரிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டி நட்சத்திர ஓட்டலுக்கு செல்லும் வழியிலும், கிண்டியில் இருந்து மாமல்லபுரம்  செல்லும் சாலையிலும் சுமார் 50 கிமீ தூரத்துக்கு 35 இடங்களில் சீன அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. சீன அதிபர் தங்க உள்ள கிண்டி கிராண்ட் சோழா ஓட்டல் முன்பு வாழை மற்றும் கரும்புகளால் ஆன அலங்கார வளைவுகள் அமைக்கப்படுகிறது.

மாமல்லபுரம் நுழைவாயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சாலையோரங்களில் வாழை மரம் மற்றும் தோரணங்களும் கட்டப்படுகின்றன.

கேரள செண்டை மேளம், கோவை டிரம்ஸ், வடஇந்தியாவில் புகழ்பெற்ற நாசிக் டோல் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. சென்னை முதல் மாமல்லபுரம் வரை 15 மாவட்டங்களில் இருந்து சுமார் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜின்பிங்குடன் 200 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவும் தமிழகம் வருகை தருகிறது. மேலும், நேற்றே சீனாவில் இருந்து அதிநவீன 4 கார்கள் சென்னை வந்துவிட்டன.

மாமல்லபுரத்தில் 800 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரபல சிற்பகூடங்கள், பூங்கா, குடவரை, கோயில்கள் இருக்கும் மலை பகுதி, கடற்கரை, மேம்பாலம் மற்றும் புலிக்குகை, பிடாரரதம் என அனைத்து பகுதியிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சாலையோர கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது. புராதான சின்னங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. ஓட்டல்கள், விடுதிகள், ரிசார்ட்களில் யாரும் தங்க அனுமதியில்லை.

மாமல்லபுரம் பகுதியில் வாடகைக்கு தங்கியிருப்பவர்கள், குத்தகைக்கு இருப்பவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கோவளத்தில் இருந்து கல்பாக்கம் வரை மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடற்பரப்பில் 2 போர்க்கப்பல்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. திபெத்தியர்கள் சுதந்திரம் கோரி போராட்டம் நடத்தி வருவதால், சீன அதிபர் செல்லும் இடங்களில் திபெத்தியர்கள் போராட்டம் நடந்து விட கூடாது என்பதற்காகவும் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் நகரத்துக்குள் அரசு பஸ்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் இருந்து 3 கிமீ தூரத்தில் உள்ள பூஞ்சேரி என்ற இடத்தில் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் கீழே இறக்கி விடப்படுவார்கள். இதற்காக அங்கு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தடை சீன அதிபர் மாமல்லபுரத்தில் இருந்து செல்லும் வரை அமலில் இருக்கும். மொத்தத்தில் மாமல்லபுரம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இரு நாட்டு கொடிகள்

மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இடம் பெற்றுள்ள 5 ரதம் பகுதியில் இரு நாட்டு கொடிகள் வரிசையாக பறக்க விடப்பட்டுள்ளது.

பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளை மூட பரிசீலனை

மாமல்லபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பல அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இரு நாட்டு தலைவர்கள் வருகை தர உள்ள நிலையில், டாஸ்மாக் கடையில் குடித்து விட்டு வரும் குடிமகன்களால் இடையூறு வந்து விட கூடாது என்பதற்காக கடைகளை மூடுவது பற்றியும் அதிகாரிகள் பரிசீலித்து வருகிறார்கள்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு போதுமான உணவு, கழிவறை வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படவில்லை.

தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் இல்லை.

.

மூலக்கதை