கர்நாடக முன்னாள் துணைமுதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கர்நாடக முன்னாள் துணைமுதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் ஜி. பரமேஷ்வருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். எல். ஜாலப்பாவை தலைவராக கொண்டு இயங்கிவரும் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். மத்தியில் பாஜ தலைமையில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைந்த பின் கர்நாடகாவில் உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

முன்னாள் அமைச்சர்கள் டி. கே. சிவகுமார், பரமேஷ்வர் நாயக், காங்கிரஸ் எம்எல்ஏகள் லட்சுமி ஹெப்பால்கர், ராஜண்ணா ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். இதில் கிடைத்த ஆவணங்களை ஆதாரமாக வைத்து ஐடி சோதனையை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வழக்கு தொடர்ந்தனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகள், டி. கே. சிவகுமாரை கைது செய்து, டெல்லி திகார் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஆர். எல். ஜாலப்பாவை தலைவராக கொண்டு இயங்கிவரும் தேவராஜ் அரஸ் மருத்துவ கல்லூரி, ஆர். எல். ஜாலப்பா மருத்துவமனை, ஆர். எல். ஜாலப்பா நர்சிங் கல்லூரி ஆகியவை கோலார் மாவட்டம், தமக்காவில் உள்ளது.

இதில் இன்று காலை 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ஜாலப்பாவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறார்கள்.

மேலும் ஜாலப்பாவின் மகனும் முன்னாள் எம்எல்ஏவுமான நாகேந்திராவுக்கு சொந்தமான வீடு பெங்களூரு ஊரக மாவட்டம், தொட்டபள்ளபுரா தாலுகா, சோமேஷ்வரநகரில் உள்ளது. அந்த வீட்டிலும் 5 ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

மேலும் முன்னாள் துணைமுதல்வர் டாக்டர் ஜி. பரமேஷ்வருக்கு சொந்தமான சித்தார்த்தா கல்வி குழுமம் துமகூரு மாவட்டத்தில் இயங்கி வருகிறது.

அதன் கீழ் மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூ, முதல்நிலை கல்லூரி, டிகிரி கல்லூரி உள்பட 20க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளது. இன்று காலை 60க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே சமயத்தில் கல்வி நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

மேலும் பெங்களூரு சதாசிவநகரில் உள்ள பரமேஷ்வர் வீடு, துமகூரு மாவட்டம், கொரட்டிகெரேவில் உள்ள வீடு, அலுவலகம், அவரது சகோதருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தி வருகிறார்கள். பரமேஷ்வரின் உறவினர்கள், கல்வி குழுமத்தில் இயக்குனர்களாக உள்ளவர்கள் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.

பெங்களூரு ஊரக மாவட்டம், நெலமங்கல டவுன் முனிசிபாலிட்டியின் சுபாஷ்நகர் வார்டு மஜத கவுன்சிலராக இருக்கும் சிவகுமார் வீட்டிலும் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

அவருக்கு சொந்தமான வீடு, தொழிற்சாலை, அலுவலங்கள், உறவினர்கள் வீடுகளில் காலை முதல் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். வருமானத்திற்கும் அதிகம் சொத்து சேர்த்தள்ளதாக வந்து புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தி வருவதாக வருமான வரித்துறை விளக்கம் கொடுக்கிறது.

ஆனால் காங்கிரஸ் தலைவர்களை டார்கெட்டாக வைத்து சோதனை நடத்தி வருவதாக முன்னாள் முதல்வரும், சட்டபேரவை எதிர்கட்சி தலைவருமான சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு பழிவாங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருவதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

ஐடி அதிகாரிகள் நடத்திவரும் சோதனை தொடர்பாக இன்று தொடங்கும் பேரவை கூட்டத்தில் கேள்வி எழுப்ப காங்கிரஸ் மற்றும் மஜத முடிவு செய்துள்ளது.

.

மூலக்கதை