பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் வரலாற்று வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரதமர் மோடிசீன அதிபர் ஜி ஜின்பிங் வரலாற்று வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நாளை மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வரலாறு காணாத அளவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது.

இதனால், மாமல்லபுரம் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் சீன அதிபர் ஜிஜின்பிங் நாளை சென்னை வருகிறார்.

நாளை மாலை 4 மணிக்கு இருவரும் கடற்கரை கோயிலில் சந்தித்துப் பேசுகின்றனர். அப்போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் நடந்து வருகிறது. இந்தநிலையில், இந்தியாவுடன் வர்த்தகத்தை மேம்படுத்த சீனா முடிவு செய்தது.

இந்த ஒப்பந்தம் மூலம் புதிய வர்த்தகம் இரு நாடுகளுக்கிடையே நடைபெறும். பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரவு உணவு இருவருக்கும் வழங்கப்படுகிறது.

இருவரும் 12ம் தேதி காலையில் மீண்டும் சந்தித்துப் பேசுகின்றனர். மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பினால் மாமல்லபுரம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையின் போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது, சர்வதேச பிரச்னைகள், இருநாட்டு வர்த்தகம் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

இருநாட்டு தலைவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சியால் கடந்த சில தினங்களாகவே மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சீன அதிபர் வருகையையொட்டி அவர் பயணம் செய்வதற்காக நேற்று முன்தினம் பீஜிங்கில் இருந்து தனி விமானம் மூலம் 4 கார்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.

அதிநவீன குண்டுதுளைக்காத இந்த கார்களில் சீன பிதமர் மாமல்லபுரத்திற்கு பயணம் செய்ய உள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இருவரும் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட சிற்பங்களை பார்வையிடுகின்றனர். அங்கு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரு தலைவர்களையும் வரவேற்கும் வகையில் கிண்டி முதல் மாமல்லபுரம் வரையில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது. வழிநெடுகிழும் 34 இடங்களில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சிகளை கண்காணிக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கவும் 50க்கும் அதிகமான அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. மொத்தம் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தலைவர்கள் செல்லும் பாதை நெடுகிலும் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் குதிரை படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், மாமல்லபுரமே விழாக்கோளம் பூண்டுள்ளது.

இளநீர் சாப்பிட்ட சீன அதிபர்

1956ம் ஆண்டு சீன பிரதமர் ஜோ என் லி, மாமல்லபுரம் அருகே உள்ள குழிப்பாந்தண்டலம் கிராமத்துக்கு வந்துள்ளார். அங்கு, மகப்பேறு மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார்.

அப்போது, அங்குள்ள மக்கள், அவருக்கு இளநீர் வழங்கியுள்ளனர். அதை குடித்து விட்டு, மிகவும் சுவையாக உள்ளது என்று சீன பிரதமர் கூறியுள்ளார்.

மேலும், இங்குள்ள கலாச்சாரம், பாரம்பரியம் மிகவும் பிடித்துள்ளதாக கூறியுள்ளார்.

* 7ம் நூற்றாண்டில் சீன மதகுரு யுவான்ஸ்வாங், இந்தியா வந்துள்ளார். அப்போது, மாமல்லபுரத்தின் சிறப்புகளை அறிந்து அங்கு வந்தார்.

அப்போது, கடல் வழியாக வணிகம் மேற்கொண்டார்.
* காஞ்சிபுரத்தை சேர்ந்த போதி தர்மர், சீனாவுக்கு சென்று இந்திய கலாச்சாரங்களை கற்பித்துள்ளார்.

அதுபோன்று சீன கலைகளையும் கற்று கொண்டு இந்தியா திரும்பினார்.

.

மூலக்கதை