பிரதமர் நரேந்திர மோடி- சீன அதிபர் ஜீ ஜின்பிங் இடையேயான பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்...

தினகரன்  தினகரன்
பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜீ ஜின்பிங் இடையேயான பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்...

சென்னை : இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக நீடித்து வரும் முக்கிய பிரச்சனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் ஜீ ஜின்பிங்கும் பாதுகாப்பு, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், எல்லை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விரிவாக பேச உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் சீனா உரிமைக் கோரி வரும் டோக்லாம், இந்தியா உரிமைக் கோரும் அக்சைச்சின், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங் ஆகிய இடங்கள் தொடர்பாக விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.   1962ம் ஆண்டு பிறகு சீனா ஒரு நட்பு நாடாக இல்லாவிட்டாலும் தற்போதைய நகர்வு இருநாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. திபெத் தலைவர் தலாய் லாமாவுக்கு இந்தியா 50 ஆண்டுகளாக அடைக்கலம் அளித்து வருவது, ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரம் மூலம் இந்தியாவுக்கு முட்டுக் கட்டை போடுவது குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது. அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியாவை இடம் பெற விடாமல் சீனா தடுப்பதற்கு தீர்வு காணப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு மறைமுக ஆதரவு, இந்தியாவின் எதிரிப்பையும் மீறி ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா போடும் பட்டுப்பாதை திட்டம் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று கருத்து நிலவுகிறது. பாகிஸ்தானுக்கு சிந்துநதி நீரை நிறுத்த இந்தியா முடிவு செய்த போது, பிரம்மபுத்திராவின் கிளை நதியான சாங்போ நீரை இந்தியாவிற்கு வழங்காமல் சீனா கடந்தாண்டு நிறுத்தியது. இது குறித்தும், பேசப்படலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

மூலக்கதை