சீன அதிபரை கவர சிறப்பு கலை நிகழ்ச்சிகள்

தினமலர்  தினமலர்
சீன அதிபரை கவர சிறப்பு கலை நிகழ்ச்சிகள்

சீன அதிபரை கவரும் வகையில், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக, 34 இடங்களில் மேடை அமைக்கும் பணி, வேகமாக நடக்கிறது.இரு நாடுகளுக்கு இடையே, நல்லறவு பேச்சு நடத்த, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் சந்திக்கின்றனர். இதற்காக, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில், சீன அதிபர் வரும், 11, 12 இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அவரை கவரும் வகையில் தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள், தமிழக அரசின் ஏற்பாட்டில் நடத்தப்பட உள்ளன.


இதுமட்டுமின்றி, பள்ளி, கல்லுாரி மாணவர்களும், சீன அதிபரை வரவேற்கவுள்ளனர். இதற்காக, சென்னை விமான நிலையத்தில் துவங்கி, மாமல்லபுரம் வரை, 34 இடங்களில் மேடை அமைக்கும் பணிகளை, தமிழக பொதுப்பணித் துறையினர் துவங்கியுள்ளனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக, விமான நிலையத்தில் துவங்கி, மாமல்லபுரம் வரை, 54 கி.மீ.,க்கு சாலையோரங்களில் தடுப்புகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
சீன அதிபர் மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் குழுவினர், மாமல்லபுரத்தின் அழகை ரசிப்பதற்காக, தற்காலிக மின்விளக்கு வசதிகளையும், பொதுப்பணித் துறையினர் செய்து வருகின்றனர்.முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவின்படி, இப்பணிகளை ஒருங்கிணைப்பதற்கு, பொதுப்பணித் துறை கட்டடங்கள் பிரிவின், முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகன், கண்காணிப்பு பொறியாளர் ஆயத்தரசு ராஜசேகர் மற்றும், 50 பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.***
- நமது நிருபர் -

மூலக்கதை