பாரத ஸ்டேட் வங்கி மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை 7 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக குறைத்துள்ளது

தினகரன்  தினகரன்
பாரத ஸ்டேட் வங்கி மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை 7 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக குறைத்துள்ளது

டெல்லி: பாரத ஸ்டேட் வங்கி  மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை 7 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக குறைத்து விட்டது. ஓய்வுபெற்றவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் பலர் வங்கி தரும் வட்டியை தான் தங்கள் வாழ்வாதாரமாக கருதுகின்றனர். பாரத ஸ்டேட் வங்கி அண்மையில் 1 லட்சத்திற்கான வட்டி விகிதத்தை 3.50% -ல் இருந்து 3.25% ஆக மாற்றி கால் சதவீத வட்டியை குறைத்துள்ள நிலையில் இதர வங்கிகளும் இதை பின்பற்ற உள்ளனர். கூடுதல் வட்டிக்காக மூத்த குடிமக்கள் இனி பங்குச்சந்தை போன்ற வெளி முதலீடுகளை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். நாட்டில் தற்போது நான்கு கோடிக்கும் அதிகமான மூத்த குடிமக்கள் உள்ளனர். அவர்களின் கணக்குகளில் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வட்டிவிகிதம் குறையும் போது இத்தொகை முழுவதற்கும் பாதிப்பை ஏற்படுத்தும், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் வட்டி விகிதங்கள் குறைந்துள்ள நிலையில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.  வட்டி விகிதம் 6% சதவீதத்தில் இருந்து கீழாக போகும்போது  வட்டியை நம்பி வாழும் மூத்த குடிமக்களிடம் அது சமூக ரீதியான அமைதியின்மையை ஏற்படுத்தும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். 8 % வட்டிக்கு பழகி இருக்கும் மூத்த குடிமக்கள், தற்போது 6% முதல் 7% வட்டி விகிதத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பண வீக்கம் 5% சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் வங்கி அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மூலக்கதை