காங்கிரஸ் இந்திய கலாசாரத்திற்கு எதிரானது...ரபேல் விமானத்திற்கு பூஜை செய்த ராஜ்நாத் சிங்கிற்கு அமித்ஷா ஆதரவு

தினகரன்  தினகரன்
காங்கிரஸ் இந்திய கலாசாரத்திற்கு எதிரானது...ரபேல் விமானத்திற்கு பூஜை செய்த ராஜ்நாத் சிங்கிற்கு அமித்ஷா ஆதரவு

சண்டிகர்: ரபேல் போர் விமானத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பூஜை செய்ததற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை நவீன  ஏவுகணைகளுடன் ரூ.59 ஆயிரம் கோடியில் வாங்குவதற்கு பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் 3 ஆண்டுக்கு முன் ஒப்பந்தம் போடப்பட்டது. 36 விமானங்களும் பறக்கும் நிலையில் வாங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக 4 விமானங்களை  வழங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் முதல் விமானம் தயாரிக்கப்பட்டு இந்தியாவிடம் நேற்று ஒப்படைத்தது.முதல் விமானத்தை பெற்றுக்கொள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் பாரிஸ்  சென்றடைந்தார். அவர் நேற்று எலைசீ மாளிகையில் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து, அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய முதல் ரபேல் போர் விமானம் முறைப்படி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. விமானத்தை பெற்றுக் கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரபேல்  விமானத்தின் மீது குங்குமத்தால் ஓம் என்ற எழுத்தை எழுதி மந்திரித்த கையிற்றையும் கட்டினார். மேலும், டயர்களுக்கு கீழே எலுமிச்சைப் பழம் வைத்தும் பூஜை செய்தார். ரபேல் போர் விமானத்திற்கு ராஐ்நாத் சிங் பூஜை செய்ததற்கு  காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. மத நிகழ்ச்சியான விஜயதசமியும், ரபேல் போர் விமானமும் ஒன்றுக்கொன்று பொருந்தாது. நாம் அனைவரும் கொண்டாடும் பண்டிகையை போர் விமானத்துடன் ஏன் இணைக்க வேண்டும் என அக்கட்சியின்  சந்தீப் தீக்சித் கூறினார். இதற்கு ஹரியானாவில் நடந்த கூட்டத்தில் பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரபேல் விமானத்திற்கு,ராணுவ அமைச்சர் ராஜ்நாத் நேற்று சாஸ்திரா பூஜை செய்தார். இந்திய கலாசாரத்தை பின்பற்றியே பூஜை செய்தார்.  காங்கிரஸ் இதனை விரும்பவில்லை. விஜயதசமி அன்று சாஸ்திரா பூஜை செய்யக்கூடாதா? காங்கிரஸ் கட்சி, இந்திய கலாசாரத்திற்கு எதிரானது. எதை விமர்சிக்க வேண்டும்; விமர்சிக்க கூடாது என்பதை அக்கட்சி முதலில் புரிந்து கொள்ள  வேண்டும் என்றார்.

மூலக்கதை